பிரட் இல்லாவிட்டால் என்ன.. மக்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” இந்திய பொருளாதாரமும் இப்படி தான்

0 457

வாகன உற்பத்தி (ஆட்டோமொபைல்) துறை சரிவை சமாளிக்க, “பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குங்கள்” என்று சொல்லியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சிலர், “அரசு அலுவலகங்கள் வாகனங்கள் வாங்க இருந்த தடையை நீக்கி, புதிய வாகனங்கள் வாங்கச் சொல்கிறார் நிர்மலா. இதைப் புரிந்துகொள்ளாமல் பொருளாதார சீரழிவு என்கிறார்கள்” என்று சொல்கிறார்கள்.

வாகனங்களை மக்கள் வழக்கம்போல் வாங்கினால், ஏன் அரசு அலுவலங்களில் புதிய வாகனங்களை வாங்கச் சொல்ல வேண்டும்?

சரி, மக்கள் புதிய வாகனங்களை வாங்காததன் காரணம் என்ன?

இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிந்தால் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம்..

நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை சரிந்தால் உயர் மற்றும் உயர் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதாரத்தில் கீழே சென்றுவிட்டார்கள் என்று அர்த்தம்..

லாரி விற்பனை சரிந்தால் தொழில் முனைவோர்கள் பொருளாதார ரீதியாக சுணங்கிக் கிடக்கிறார்கள் என்று அர்த்தம்..

டிராக்டர் விற்பனை சரிந்தால் விவசாயிகள் கையில் பணமில்லை என்று அர்த்தம்..

ஆக, வாகன உற்பத்தி (ஆட்டோமொபைல்) துறை சரிந்திருப்பது என்பது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதன் வெளிப்பாடு.

தவிர பொருளாதார சிக்கல் உள்ள நிலையில் அரசு செலவைக் குறைக்கத்தான் திட்டமிடுவார்கள். ஆனால் புதிய வாகனங்களை வாங்கச் சொல்வது எந்தவிதத்தில் சரியாகும்.. அதுவும் மக்கள் பணம்தானே!

இதை உணர பெரிய அறிவாளியாகவோ, பொருளாதார நிபுணராகவோ இருக்கவேண்டும் என்பதில்லை.

சராசரி அறிவுள்ள என்னைப்போன்ற பாமரனுக்கே இது புரியும்.

ஆனால் ஒரு பெரிய தேசத்தின் நிதி அமைச்சருக்கு இது புரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஆம் நிர்மலா சீதாராமன் அவர்களே.. தற்போது நிலவுவது ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி மட்டுமல்ல.. ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது.

புத்திசாலித்தனமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க முடிந்தால் செய்யுங்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அமைதியாகவாவது இருங்கள்.

“பிரட் இல்லாவிட்டால் என்ன.. மக்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” என்ற நீரோ மன்னன் பேச்சைப் போல் இருக்கிறது தங்களது கருத்து.

– டி.வி.எஸ்.சோமு,

You might also like

Leave A Reply

Your email address will not be published.