நீர் குடல். என்பது எனக்கு புது வார்த்தைதான், புதிதாக கேட்கும் போது அர்த்தம் புரியவில்லை..!

0 368

நீர் குடலும் கைத்தறி நெசவாளிகளும்:

நீர் குடல். எனக்கு இது புது வார்த்தை. கோவை புத்தக கண்காட்சியில் தும்பி அரங்கில் நேசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னது.

தன் நண்பரின் வீடு கட்டும் போது மர வேலைக்காக தேர்ந்த தச்சன் ஒருவரை அழைக்கிறார்கள். மரங்களை இனம்கண்டு நீண்ட நாட்கள் உழைக்கும் மரமாகவும் பூச்சிகள் அழிக்காவண்ணம் இருக்கும் மரமாகவும் அதே சமயத்தில் வேலைப்பாடுகள் செய்ய ஏதுவான மரமாகவும் இருக்க , தொழிலில் வம்சா வம்சமாக ஆழமாக கைதேர்ந்தவரையும் அழைத்துச் செல்கின்றனர்.

அவர் ஒவ்வொரு மரக்கிடங்குகளாக ஏறி இறங்குகிறார். ஒரு சில சிறிய மரங்களை மட்டும் தேர்வு செய்கிறார். கூட வந்தவர்கள் எல்லாம், கோபத்தில் ” அண்ணா ஏன் இவ்வளவு பெரிய மரங்களையெல்லாம் விட்டு விட்டு இவ்வளவு பெரிய மரங்களை மட்டும் எடுக்கிறீர்கள்” எனறு உரக்க கேட்கிறார்கள். அதற்கு சிறிது நேரம் கழித்து பொறுமையாக பதில் அளிக்கிறார்.

தம்பி பெரிய பெரிய மரக்கட்டைகளில் நீர் குடல்கள் இன்னும் இருக்கிறது. நல்ல காய்ந்த மரத்தில் மட்டுமே அது இருக்காது. அப்படி நீர் குடல் இருக்கிற மரத்தை வாங்கி வீட்டு நெலவு செஞ்ட்டோம்னா கொஞ்ச நாட்களில் நீர் குடல் வெடித்து மரம் விரிசல் விட ஆரம்பிக்கும் என்கிறார். யாருமே நம்பவில்லை. உடனே வனசர்க்கார் மற்றும் மருத்துவ துறையில் வேலை செய்யும் நண்பர்களை அழைத்து கேட்கிறார்கள்.

அவர்களுக்கு கிடைத்த பதில்கள் எல்லாம் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்கின்றனர். அந்த வயதானவரின் பேச்சை கேட்காமல் பெரிய மரங்களை வாங்கி, வேறு ஒரு நபரை வைத்து வீட்டு பொருட்கள் செய்கின்றனர். அந்த அய்யா சொன்னது போலவே சிறிதுகாலம் கழித்து நீர் குடல்கள் வெடிக்கிறது.

இப்படியான அறிவு , ஒருவர் அந்த தொழிலை தொழிலாக பார்க்காமல் ஆத்மார்த்தமாக உயிரோடு உயிராக , அதன் லயத்தோடு தன் ஆன்மாவை இணைத்து செய்வதில் கிடைக்கும் அறிவு. இதை தர்க்கரீதியாக அனுகினால் பதில் கிடைக்காது. உள்ளுணர்வால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

ஒரு மரம் தன் இறுதி மூச்சுவரை அதன் நீர்குடல்களில் நீரினை தக்கவைத்திருக்குமாம். எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதற்கு ஏதுவான சூழல் அமையும்போது தன்னை உயிர்பித்து கொள்வதற்காக இயற்கை அதனுள் வைத்த ஞானம் தான் அது என்று சொல்லியிருக்கிறார்.

இதுபோலத்தான், இன்றுவரைக்கும் தான் மானசீகமாக கொண்ட வைராக்கியமும் அதனுள் பொதிந்திருக்கும் அறம் மட்டுமே இன்றுவரை நெசவாளிகளை தொடர்ச்சியாக கைத்தறியில் நெய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. நீர்குடல்கள் போன்று கட்டையோடு கட்டையாக தேய்ந்திருந்த போதிலும் தன் உயிரை நெசவுக்காகவே வைத்திருக்கிறார்கள். சரியான சூழலை கொடுத்தால் போதும் ஒட்டு மொத்தத்தையும் அவர்கள் கொடுத்துவிடுவார்கள். ஒருக்காலத்திலும் பொருளாதாரமோ அதுசார்ந்த சூழலோ அவர்களுக்கு நிறைவை தராது.

நெய்யும்போது ஏற்படும் நிறைவும், கூட்டுழைப்பும் அத்தோடுசேர்ந்த அந்த தறி சத்தம் மட்டுமே அவர்களுக்கு நிறைவை கொடுக்கும்.

தன் உயிராக நேசித்து இன்று வரை நெய்து கொண்டிருக்கும் அனைத்து நெசவாளிக்ளுக்கு, நூற்போடு பயணப்படும் என் வாழ்வை சமர்ப்பிக்கிறேன்.

இன்று நிறைய நண்பர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதற்கு பாத்திரமாக மாற்றிய குக்கூ நிலத்திற்கும், சிவராஜ்அண்ணன், பீட்டர் அண்ணன், சக்தி அண்ணன் மற்றும் குடும்பத்தினர், யாதும் பழனியண்ணன், புருசோத் அண்ணன், மறைந்த நாகராஜன் அய்யா, சுரேந்திர கௌலாகி அய்யா, குக்கூ நண்பர்களுக்கும் , ஜெயமோகன் அய்யாவிற்கும், நூற்பிற்காக நெய்து கொடுக்கும் அத்தனை நெசவு கரங்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் வாழ்வின் என்றென்றைக்குமான நன்றியை சிரம்தாழ்த்தி தெரிவித்துக்கொள்கிறேன்.

முகநூல் பகிர்தல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.