நீங்கள் என்றாவது வெண்ணெய் எடுத்து உள்ளீர்களா..? இல்லை என்றால் இதனை படியுங்கள்

0 498

வெண்ணெய் எடுக்கும் முறை இதுவே.

பசும்பாலைக் காய்ச்சினால், ஆறிய பிறகு மேலே “பாலாடை” படரும். அதைச் சிறிது சிறிதாக குளிரூட்டியில் சேமித்து வைப்போம். அவ்வப்போது கெடாமல் இருக்க சிறிதளவு தயிரை அதில் ஊற்றி வைப்போம்.

தேவைப்படும் நேரத்தில் அல்லது 15-20 நாட்கள் ஆன பிறகு, சிறிது நேரம் வெளியில் எடுத்து வைக்க வேண்டும். பின், சிறிய கட்டிகளாகவோ அல்லது துகள்களாகவோ ஆக்கி, மண் சட்டியில் போட வேண்டும்.

(முக்கியமான குறிப்பு, குளிர்ச்சித்தன்மை முழுவதும் நீங்கி விடக் கூடாது, அவ்வாறு நீங்கினால் வெண்ணெய் எளிதில் திரண்டு வராது. குளிர்ச்சி குறைவாக இருந்தால் 6-7 ஐஸ்கட்டிகளைக் கடையும் போது சேர்த்துக் கொள்ளலாம்).

சட்டியில் போட்ட பிறகு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடைய வேண்டும். பாலாடையின் அளவுப் பொறுத்து வெண்ணெய் திரண்டு வர நேரமாகும். அதிகபட்சம் 15–20 நிமிடங்கள் ஆகலாம்.

வெண்ணெய் பால் கோவா போல் வெண்மையாகத் திரண்டு வரும். தண்ணீர் தனியாகப் பிரியும். கையில் ஒட்டாமல் அள்ளக் கூடிய பதமே, வெண்ணெய் திரண்டு வந்ததற்கான அர்த்தம். அச்சமயத்தில், மேலும் கூடுதலாகத் தண்ணீர் ஊற்றினால், வெண்ணெய் மேலே மிதக்கும். அதைத் தனியாக வாணலியில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாணலியை அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்கவும். காய்ச்சிய சில நிமிடங்களில், தண்ணீர் வற்றி, நெய் உருகும். சிறிய வெள்ளைத் துகள்கள் போல் அதில் மிதக்கும். அவை, பொன்னிறமாக மாறும் வரை, நெய்யைக் காய்ச்ச வேண்டும்.

பொன்னிறமாக மாறிய பின், சிறிதளவு உப்பு மற்றும் முருங்கைத் தழையை அதில் இட வேண்டும். முருங்கைத் தழை நன்றாக பொரிந்தவுடன், நெய்யை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

ஆறிய பிறகு, வடிகட்டி புட்டியில் சேமிக்கலாம். நீண்ட நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும்.

இதை, மிக்சியைக் கொண்டு செய்வதும் உண்டு. அந்த முறையை நாங்கள் விரும்புவதில்லை.

பதில்: ஸ்டெல்லா மேரி

You might also like

Leave A Reply

Your email address will not be published.