நாயின் கர்ப்பகாலம் எத்தனை நாட்கள் தெரியுமா..? இயற்கை என்றுமே விசித்திரமானது..!

0 14,400

யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.
பொதுவாக யானை ஒரு குட்டிதான் போடும்.

குதிரையின் கர்ப்பகாலம் 342 நாள்கள்.
தகுந்த இடம் அமையவில்லை எனில் குதிரை தன் பிரசவத்தை ஒரு மாதம் வரை தள்ளிப்போடும்.

முயலின் கர்ப்பகாலம் ஏழு மாதம்தான். 15 குட்டிகள் வரை போடும்.

பூனையின் கர்ப்ப கால 2 மாதம். கர்ப்பமாயிருக்கும் பூனை நாக்கை வெளியே தள்ளி மூச்சு வாங்கினால் பிரசவ நேரம் என்று அறியலாம்.

ஒட்டகச்சிவிங்கியின் கர்ப்ப காலம் 14 மாதம்.
ஒட்டகச்சிவிங்கியும் பொதுவாக ஒரு குட்டிதான் போடும்.

நாயின் கர்ப்பகாலம் 64 நாள்கள்தான். நாய் பொதுவாக
4 முதல் 8 குட்டிகள் வரை போடும்

ஒரு குட்டி உண்மை சம்பவம்

ஒரு மழை நேரத்தில், தெருவில் ஒரு நாய்க்குட்டி , தன் தாயைத் தேடி அலைந்து கொண்டிருந்தது, அது நனைந்தபடியே அழுதுகொண்டிருந்ததைப் பார்த்து, எங்கப்பா, அதை எடுத்து வீட்டுக்கு முன்னிருக்கும், வண்டி நிறுத்தும் இடத்தில் மழையில் நனையாமலிருக்கும்படி விட்டார். மழையில் நனைந்திருந்த அந்த நாய்க்குட்டியை துடைத்து விட்டு, அது சாப்பிட பால், பிஸ்கெட் என கொடுத்தோம். அடுத்த நாள் மழை நின்றதும், எங்கள் வீட்டில் ஏற்கனவே நான்கு நாய்கள் இருப்பதாலும், அதற்குமேலும் வீடு தாங்காது என்பதாலும், அதை மீண்டும் தெருவிலேயே விட்டுவிட்டோம்.

எங்கம்மா, வீட்டிலிருக்கும் நாய்களுக்கு சாப்பாடு போட்ட கையோட அதுக்கும் ஒரு கை சாப்பாடு வேளாவேளைக்கு வைத்துவிடுவார்கள், அது சாப்பிடும்போதும், அந்த இரும்பு வாயிற்கதவின் அருகிலேயே நின்று, அதனிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பார், என்ன பேசுவாரென தெரியாது.

அது தினமும் நானும், எங்கப்பாவும் வேலைமுடித்து வீடு திரும்பும்போது, தெருமுனையிலிருந்து வண்டியுடன் பின்னாடியே ஓடி வரும். வீடுவரை வந்து நின்று, வண்டி நிறுத்துவதை கூர்மையாக பார்த்து, பின் கதவை மூடும் போது வாலாட்டி, பிஸ்கட், பொறையை கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகரும். மற்ற நாய்கள் எங்கள் வாசலிருகில் வந்தாலே கத்தி கூச்சல் போடும் எங்கள் வீட்டு நாய்கள், அந்த நாய் எங்களுடன் பழகுவதைக் கண்டு அவைகளும் அமைதியாகிவிட்டன, அது வாசலில் வந்து நின்றாலும் அமைதியாக இருக்க பழகிவிட்டன. அது ஒரு பெண் நாய், அது வளர்ந்து குட்டிப்போட்டு கஷ்டப்படுவதற்கு பதிலாக அதை கொண்டு போய் spay (கருத்தடை) செய்திட வேண்டுமென அப்பா என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு தனியாக பெயர் எதுவும் வைக்கவில்லை, பெண்ணாக இருந்ததால், அதை ‘பொன்னு’ என் தான் கூப்பிடுவோம். என்னுடைய அக்காவும், அந்த நாயுடன் எங்கம்மா பேசுவதைப் பார்த்து ‘ஏம்மா உனக்கு வீட்டிலிருக்க நாய் பத்தாதா? இப்ப புதுசா ஒன்னு கொண்டு வந்துடுவ போல”என கிண்டல் செய்வார்.

ஆடி மாதமும் வந்தது, அப்போது தெரு நாய்கள் எல்லாம் வெகுவாக ஆட்டம் போட்டு, அமர்களம் செய்துகொண்டிருந்தன. மற்ற தெரு நாய்களும் எங்கள் தெருவுக்கு வர ஆரம்பித்தன, அந்த நாய்கள் சத்தம் போடுவதும், ஒரே நேரத்தில் பல நாய்கள் தெருவில் ஓடிக்கொண்டிருப்பதும், எங்கள் தெரு மக்களுக்கு தொந்தரவாக இருந்தது, இந்த நாயினால் தான் மற்ற நாய்கள் இங்கே வருகின்றன என திட்டிக்கொண்டிருந்தனர் சிலர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் எதெச்சையாக எங்கள் வீட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன், எதிர் வீட்டு வாசலில் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனத்தின் கீழ் அந்த நாய் படுத்திருந்தது. அதனருகில், அந்த சமயம் அதனுடன் சுத்திகொண்டிருந்த ஒரு வெள்ளை ஆண் நாயும் உட்கார்ந்திருந்தது. சிறுது நேரம் கழித்து, சாப்பிட கீழே இறங்கும்போது பார்த்தால், காலையில் பார்த்தபோது எப்படி படுத்திருந்ததோ அப்படியே அசையாமல் படுத்திருந்தது, எனக்கு ஏதோ பிரச்சனை என தோன்றியது, எதிர் வீட்டு அண்ணனை கூப்பிட்டு கேட்டேன், அவர் வீட்டிலிருந்து இறங்கிப்பார்க்க அதனருகில் போனார், ஆனால், அந்த வெள்ளை நாய் அவரை நெருங்க விடவில்லை. அவர் அதை துரத்தவும் முயற்சி செய்தார், கல்லெறிந்தார், அது அங்கிருந்து நகரவில்லை, திரும்பவும் அந்த நாயின் அருகிலேயே போய் உட்கார்ந்துகொண்டது. உடனே நான் வெளியே போய், அந்த வண்டியை நகர்த்தப் போனேன், அந்த வெள்ளை நாய், ஒருமுறை என்னை பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தது. அந்த வண்டியை நகர்த்திவிட்டு பார்த்தால், அந்த நாய் இறந்து போயிருந்தது. எங்கப்பாவும் வெளியே வந்து என்ன ஆனதென கேட்டார், நான் ‘செத்துடுச்சு’ன்னு என சொன்னேன். ‘எப்படி என்ன ஆச்சு பாரு’ன்னு சொன்னார், நான் அதை நகர்த்தி பார்த்தேன், உடம்பில் எந்த காயமும் இல்லை, அதை திருப்பி பார்த்தால் தலை மட்டும் வீங்கியிருந்தது, நிச்சயமாக யாரோ அடித்ததால் தான் அது இறந்திருக்க வேண்டும்.

பிறகு, எதிர் வீட்டு அண்ணன் துப்புறவு பணியாளர் ஒருவரை கூட்டிக்கொண்டு வந்தார், நூறு ரூபாய் பணம் கொடுத்து, ‘கொண்டுபோய் போட்டுடு’ என சொன்னார். அந்த அண்ணன் ஒரு கோணிப்பையை பிடித்துக்கொள்ள, நாங்களிருவரும் அதை உள்ளே தூக்கிப்போட்டோம், அந்த ஆள் அவர் கொண்டுவந்திருந்த சைக்கிளில் அதைக் கட்டி கொண்டுபோயிட்டார். அந்த வெள்ளை நாயும் அவர் பின்னாடி குரைத்துக்கொண்டே ஓடியது.

இது நடந்து நான்கு, ஐந்து நாட்களுக்கு மனது மிக இறுக்கமாவே இருந்தது, பெரிய இழப்பு போலவும், கேட்க யாருமற்ற நிலையினால்தான் அது இறந்தது அல்லது கொல்லப்பட்டது எனவும், தெருவில் முன்பு, அந்த நாயை திட்டிக்கொண்டிருந்தவர்களை பார்க்கும்போதெல்லாம் ஒரு கோவம் வந்துகொண்டே இருக்கும், இவர்களில் யாரோதான் இதை செய்திருக்க வேண்டும், யாரென தெரிந்தால் குறைந்தது திட்டவாவது செய்யலாமென தோன்றும்.

ஒருநாள் இரவு, தூக்கத்திலிருந்து திடீரென தூக்கம் கலைந்து எழுந்தேன், யாரும் அல்லது எந்த சத்தமும் என்னை எழுப்பவில்லை, ஜன்னல் வழியே தெருவிளக்கின் வெளிச்சம் பிரகாசமாக தெரிந்தது, அதன் வழியே வெளியே எட்டிப்பார்த்தால், அதே நாய் வாயிற்கதவின் அருகே அமர்ந்தபடி தலையை தூக்கி என்னைப் பார்க்கிறது. என்ன நடக்கிறதென்றே எனக்கு புரியவில்லை, அந்த நாய் எப்படி வரும்? அதேபோல வேறு நாயா? வேறு நாயாக இருந்தால் எப்படி அது உட்காருவது போலவே வாயிற்கதவின் அருகில் அமர்ந்து இப்படி பார்க்கும், எங்கள் வீட்டிலிருக்கும் நாய்களும் குரைத்திருக்க வேண்டுமே! வேக வேகமா படி இறங்கி கீழே வந்து பார்த்தேன், அந்த நாய், என்னைக்கண்டதும் மகிழ்ச்சியில் வேகமாக வாலட்டுகிறது, நின்ற இடத்திலேயே குதிக்கின்றது, முனகுகின்றது, அதைப்பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்திருந்தன. வாலாட்டி அது வழக்கமா பிஸ்கேட் கேட்கும்போது, அந்த க்ரில் கட்டத்துக்குள்ள எப்படி முகத்தை வைக்குமோ அப்படி முகத்தை வைத்து என்னை பார்த்துக்கொண்டிருந்தது, நான் கலங்கிய கண்களுடன், குரல் தழுதழுக்க ‘என்னடி பொன்னு’ என கேட்டுக்கொண்டே அதை தொட என் கையை நீட்டினேன், அந்த நாயின் மூக்கின் ஈரம் என் விரல்களில் ஒட்டியது.

முற்றும்.

ஆயிரத்தில் ஒருவன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.