நம் பாரம்பரிய விதை நம்மை மறந்தது ஏன்..? அழிவு ரகசியம் இதுதான்..!

0 251

வீழ்ந்தால் விதையாக விழு என்பது நம் முன்னோர்களின் வாக்கு,காரணம் இவ்வுலகின் ஆணிவேரே விதையால் இயங்குகிறது என்பதை அனைவரும் அறிவர்.நம்முடைய உயிர் விதைகளுடைய உயிரைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

தன்னை மண்ணில் புதைத்து வளர்ந்து மரமானால் தான், இந்த உலகம் உயிர் பெரும். தன்னைத்தானே இறையாக்கிக் கொள்ளும் பண்பாலே விதையை இறைவனாகக் காண்கிறோம். இத்தகைய பண்புடைய விதையை வணிகமாக்கியது தான் நாம் செய்த மிகப்பெரும் துரோகம்.

நம் தமிழக வரலாறு,நீண்ட நெடு வரலாற்றைக் கொண்டது,இங்கு பஞ்சம் வந்த காலத்தில் கூட விதை நெல்லை உண்ணாது தம் எதிர்கால சந்ததிகளுக்காக விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உயிரையும் மாய்த்துக் கொண்ட வரலாறுகள் பல உண்டு , அத்தகைய சிறப்பைக் கொண்ட வரலாறுகள் படைத்த நம் நாட்டில் இன்று விதைகளின் வியாபாரமே மேலோங்கி இருக்கிறது என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.

விதை என்றுமே நம் வரலாற்றில் வியாபாரமாக இருந்ததில்லை ,சில காலங்களுக்கு முன்புவரை விதைக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. விதை என்பது ஒரு வியாபாரமே கிடையாது. விதையை நம் பண்டமாற்று முறையிலேயே ,விதை மாற்றி பயிரிட்டு வந்துள்ளோம்.உலகம் முழுவதும் பணமயமாக்கப்பட்டபோது கூட விதைக்கு நாம் பண நிர்ணயம் செய்யவில்லை .

இப்படி மகத்துவம் கொண்ட விதையை,மகத்துவம் கொண்ட செயலை, மகத்துவம் கொண்ட வரலாறை கொண்ட நாம் வாழ்ந்து ஆள்ந்து கொண்டிருக்கும்பொழுது தான் பணத்தின் வெறி நம்மையும் அதற்கு இறையாக்கியது.மேல் நாட்டிலிருந்து விதை வியாபாரிகள் நமக்குள் நுழைய ஆரம்பித்தார்கள்.

அதன் ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த மான்சாண்டோ நிறுவனம். 2002ல் இந்த மான்சாண்டோ நிறுவனமானது நமக்குள் வர ஆராம்பித்தது ,இவர்கள் மரபணு மாற்றப்பட்ட PT பருத்தி விதைகளை அறிமுகப்படுத்தினார்கள்.நம் பாரம்பரிய நாட்டு பருத்தி விதைகள் இருபது ரூபாய்க்கு கிடைக்கும் காலத்திலேயே இரண்டாயிரம் ரூபாய்க்கு மரபணு மாற்றப்பட்ட PT பருத்தி விதைகளை இவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
மாற்றம் அன்று தான் ஆரம்பித்தது.

உழவனுக்கும்,உழவுக்கும் உயிர் கொடுத்த விதை வனிகமாக்கப்பட்டது.அது பெரும் முதலாளிகளின் கையில் சிக்கிக்கொண்டு இலாபங்களைக் கொழிக்க ஆரம்பித்தது.
அரசியல்வாதிகள்,பன்னாட்டு நிறுவனங்கள், அறிவியல் ஆர்வலர்கள் தன்னை அறிவியல் மேதைகள் என்றுக் கூறிக்கொள்ளும் நபர்கள் வரை அனைவரும் இதற்கு உடந்தையாக இருக்க ஆரம்பித்தார்கள் .நம் பாரம்பரிய விதைகள் அனைத்தும் அழிக்கப்பட்டது.

செயற்கையாக மரபணு மாற்றப்பட்ட PT விதைகள் நம் நாடெங்கும் பரவ ஆரம்பித்தது. அதன் முடிவு நம் நாட்டிலுள்ள 90% பருத்தி விதைகளின் வியாபாரம் மான்சாண்டோ நிறுவனத்திடம் சென்றது.மான்சாண்டோ நிறுவனம் இலாபத்தில் கொழிக்க ஆரம்பித்தது. மான்சாண்டோ நிறுவனத்திடம் உரிமைகள் வாங்கிய மற்றவர்களும் இலாபத்தில் கொழிக்க ஆரம்பித்தனர்.ஆனால் விவசாயிகளின் நிலைமை.? மான்சாண்டோ இலாபத்தில் கொழிக்க கொழிக்க விவசாயிகள் இங்கு செத்து மடிய ஆரம்பித்தனர்.
இன்று நம் நாட்டில் நடக்கும் விவசாயிகள் தற்கொலையில் 70% பேர் பருத்தி விவசாயிகளே.

இச்சூழலிலே நம் விதை ஆர்வலர்கள் பலர் விதைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நம் பாரம்பரிய விதைகளைக் காக்க ஆரம்பித்தார்கள்.இன்று பல விதைக் காப்பாளர்கள் பாரம்பரிய விதைகளை காத்து வருகின்றனர்.ஆனால் அரசின் கெடுபிடியான சட்டங்களால் விதை காப்பாளர்களுக்கு மட்டுமின்றி விதைகளை காக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் கடினமாக்கும் சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நாம் இந்நிலைக்கு சென்றதன் காரணம் என்ன? நம் சிந்தனை சரியாக இருந்திருப்பின் நாம் இந்நிலைக்கு சென்றிருப்போமா..?

நம் பணத்தாசையால் அனைத்தையும் அழித்தோம்,இன்று நம்மையே நாம் அழித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு சூழ்நிலையையும் நம் வாழ்க்கைக்கு தகுந்தவாறு எப்படி மாற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மிடைய இருந்த காலத்தைக் கடந்து இன்று ஒவ்வொரு சூழ்நிலையிலும் , சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி வாழ வேண்டும் என்ற எண்ணத்துக்குள் நாம் திணிக்கப்பட்டோம். விதைகளை மட்டும் நாம் அழிக்கவில்லை நம் உயிர்களையும் நாம் அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியாது நாம் சிரித்துக் கொண்டிருக்கின்றோம். காலம் வெகுதூரம் அல்ல அனைத்தையும் ஒரு நாள் அனைவரும் அறிவர் ,அழிக்கப்பட்டது விதை அல்ல நீ என்பதை நீ உணரும் பொழுது மீண்டும் நம் பாரம்பரிய விதை உயிர் பெரும் , மீண்டும் இயற்கை அன்னை உன்னை கட்டித் தழுவும். மீண்டும் மனிதன் மனிதனாவான்.
“நான் மீண்டும் மீண்டு வருவேன்” – விதை

நன்றி
ழகரம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.