தேனை தலையில் தடவினால் முடி நரைத்து விடுமா..? ஏன் தலையில் தடவக்கூடாது என்றார்கள்..?

0 1,302

தேனானது அதிக இனிப்பு சுவை உடையது தேனை தண்ணீர் போன்று குடிக்க முடியாது ஆகையால் நக்கி தான் சாப்பிட வேண்டும்..!

தேனை கையில் ஊற்றி நக்கி சாப்பிட்ட பிறகு பெரும்பாலும் கடைசியில் கையை தலையில் தடவி விடுவார்கள் , தலையில் தடவினால் எறும்பு வண்டு, போன்றவை இரவில் தொந்தரவு செய்யும் ஆகையால் தலையில் தடவினால் முடி நரைத்து விடும் என்று எதிர்மறை எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

பொதுவாக நாம் வெள்ளை நிறத்தை அதிகம் விரும்புகிறோம். உண்மைதானே? உங்களிடம் ஒரு கேள்வி. நமது வாழ்க்கையில் வெள்ளையை வெறுக்கின்ற ஒரு தருணம் இருக்கிறது. எந்தத் தருணம்?

மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசித்து ‘பரிட்சைத் தாளில் விடை எழுதாத பக்கத்தின் வெள்ளையை வாத்தியார் வெறுப்பார்’ என்று விடுகதைக்கு விடை சொல்வதுபோல் சொல்லாதீர்கள்.
நானே சொல்லிவிடுகிறேன். நமது தலைமுடி நரைத்தால் அந்த வெள்ளையை நாம் வெறுக்கிறோம். சரிதானே? வருடம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையோடு வலம் வருகிறவர்கள்கூட தலையில் நரை தெரிவதை விரும்புவதில்லை.

கருஞ்சாயம் (டய்) அடித்து மறைக்கிறார்கள். இந்நேரத்தில் என் நண்பன் ஒருவன் ஞாபகம் வருகிறான். வெள்ளையான பெண்ணைத் திருமணம் செய்ய போராடிக்கொண்டிருக்கிறான். அவனிடம் ‘நண்பா, உச்சி முதல் உள்ளங்கால் வரை வெள்ளையான ஒரு பெண்ணைச் சொல்கிறேன்’ என்று சொல்லி தலைமுடி ஒன்றுவிடாமல் நரைத்த ஒரு பெண்ணைக் காட்டினால் அவன் தலைதெறிக்க ஓடுவது நிச்சயம். வெள்ளையான குமரிப்பெண்ணே என்றாலும் தலைமுடி நரைத்திருந்தால் தலையைத் திருப்பிக்கொள்வது நிதர்சனம்.

தேனில் ஃபேசியல் செய்யுங்கள் என்று நான் ஆண்களுக்கும் சொன்னவுடன் நிறைய கேள்விகள் எனக்கு வாட்ஸ் அப் ஆயின. ‘தேன் பட்டால் முடி நரைக்காதா?’ ‘மீசையை விட்டுவிட்டுப் பூசட்டுமா?’ ‘தாடியில் படக்கூடாதுதானே?’ இப்படி.. பெண்களோ, ‘புருவங்களில் படக்கூடாதுதானே?’
தேன் பட்டால் முடி நரைக்குமா எனும் கேள்விக்கு ஆம், இல்லை என்ற இரண்டு பதில்கள் உண்டு. தலைமுடிக்குத் தேனைத் தடவி Honey Pack செய்துவிட்டு நன்கு கழுவிக் குளிக்கவில்லை என்றால் காலப்போக்கில் முடி நரைக்கும்தான்.

காரணம், தேனில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உள்ளது. அதனால் நிறம் மங்கல் அடையும். ஆனால், நீங்கள் நன்கு கழுவி அலசிக் குளித்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. உண்மையில் உங்கள் தலையிலுள்ள எல்லாப் பிரச்சினைகளுமே கழுவப்பட்டுவிடும்.

முடி உதிர்தல், பொடுகு, பேன் தொல்லை, முடி வறட்சியாக இருப்பது, தலைவலி முதலிய பிரச்சினைகள் ஒழியும்.
பழங்காலத்தில் கேசத்தைப் பராமரிக்க தேனைப் பூசிக் குளித்து வந்துள்ளார்கள். இந்த வழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் தேனால் தலைமுடி நரைக்கும் என்ற நம்பிக்கையே பரவியிருக்காது. தேன் படுவதால் முடி நரைப்பதில்லை என்பதை யாரும் அறிய முடியும். நமது தோலில் முடிகள் உண்டு. பூசிப் பாருங்கள். நரைக்கிறதா? இல்லை.

பிறகு எப்படி இந்த நம்பிக்கை வந்தது? தேனைத் தடவிக் குளித்தவர்கள் சிலர் சரியாக அலசிக் கழுவாமல் விட்டதே காரணம். முடியின் வேரில் பிசுபிசுப்பு நிலைத்திருந்தால் அது நரையை முளைக்க வைக்கிறது. இதே நாம் நன்கு கழுவிக் குளித்தால் அந்த வேர்ப்பகுதி சரியான விகிதத்தில் தேனின் மருத்துவ குணங்களை உறிஞ்சிக்கொண்டு நமது கேசத்தை ஆல் க்ளியர் செய்கிறது. தலைக்கு க்ளினிக் ப்ளஸ் ஆகிறது.

முடி சன் சில்க்காக மாறுகிறது. ஹெட் அண்ட் ஷோல்டரில் பொடுகு வராமல் பார்த்துக்கொள்கிறது.
நரை முளைப்பதற்குத் தேன் காரணமல்ல. நாமே காரணம். ஒரு நரை தெரிந்தாலே கவலை தொற்றிக்கொள்கிறது பலருக்கு. விளைவு, கவலையானது பல நரைகளை உண்டாக்குகிறது. ஆம், கவலை, மன அழுத்தம், டென்ஷன், தீவிர யோசனை முதலியவை நரைக்கு முதல் காரணமாக உள்ளன.

அடுத்து, உடலில் Zinc பற்றாக்குறை, பொடுகு, சுயஇன்பம் போன்றவை. ஜெனட்டிக் எனும் மரபுவழிப் பண்பும் காரணமாகலாம். குடும்பத்தில் இளவயதிலே நரை உள்ளவர்கள் அதிகம் இருப்பது.

இறுதியான காரணம்தான், வயது முதிர்வு.
நமது கேசத்தைக் குதூகலப்படுத்தும் ஊட்டச்சத்துகள் தேனில் ஊறிக்கிடக்கின்றன. எனவே, கொஞ்ச நேரம் தேனைத் தடவிக் குளியுங்கள். மன்னிக்கவும், நன்கு குளியுங்கள். தலைக்குப் பேட்ச் போடும்போது அசௌகரியமாக இருக்கும்.

பிசுபிசுப்பு நமது மயிர்களைக் கொத்துக் கொத்தாகப் பிடித்துக்கொள்ளும். முள்ளம்பன்றியின் உடம்பு போல் மயிர்கள் நட்டுக்கொள்கின்றன.
நான் ஒரு பேட்ச் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள். 2 மேசைக்கரண்டி (Tablespoon) தேன், 1 மேசைக்கரண்டி ஆலிவ் ஆயில் / சுத்தமான தேங்காய் எண்ணெய், 1 மேசைக்கரண்டி தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். ஆலிவை இலேசாகச் சூடு பண்ணி, அதனுடன் மற்றதை ஒரு கிண்ணத்தில் நன்கு கலக்கிக்கொள்ளுங்கள்.

தலைமுடியைச் சுத்தமாகவும் ஈரமாகவும் வைத்த நிலையில் தடவுங்கள். பிறகு ஒரு துணி அல்லது பிளாஸ்டிக் கவரின் மூலம் தலையை மூடிக் கட்டிக்கொள்ளுங்கள். இதனால் முடியில் வெப்பம் தங்கும். 20 நிமிடங்கள் போதும்.

அலசிவிடுங்கள். ஷாம்பூ போடுவதைவிட சிகைக்காய் பொடி சிறந்தது. மாதம் ஒரு முறை / இரு முறை போடலாம். மாற்றம் உங்களுக்கே தெரியும். உங்கள் ஜோடி தொட்டுத் தடவி வழிந்து ‘என்ன அழகிய கேசம்!’ என்று பொய் சொல்கிற தேவை இருக்காது
பின் குறிப்பு: கலப்படம் அற்ற தேனாக இருக்க வேண்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.