சோழர்கள் செய்த நீர்மேலாண்மையும் காவிரி தீர்ப்பும் ; சற்றே வியப்பளிக்கிறது..!

0 191

கோனேரின்மை கொண்டான் வீரராசேந்திரன்

வளம் பெற்ற கொங்கு மண்டலம் பதினோராம் நூற்றாண்டிற்கு பிறகு பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் குறிப்பிடப்படவேண்டியவர்கள் வீரகேரள மரபினர் மற்றும் கொங்கு சோழர்கள்.

தஞ்சை சோழர்களால் ஆட்சியில் அமர வைக்கப்பட்டு பின் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பாடு சுதந்திர மன்னர்களாய் கொங்குப்பகுதிகளை ஆட்சி செய்தவர்கள்.இவர்களுள் முக்கியமானவர்கள் வீரசோழன் மற்றும் வீரராசேந்திரன்- இப்பதிவின் கதாநாயகன்.கி.பி.1207 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் இம்மன்னன் 47 வருடங்கள் செய்த நிர்வாக சீர்திருத்தம், திருப்ணிகள் மற்றும் நீர் மேலாண்மை இன்று கொங்கு செழித்து வளர இன்றியமையாதது.

*பேரூர் நாட்டுப் புகலிடங் கொடுத்த சோழச் சதுர்வேதி* இவ்வூரின் நீர் தட்டுப்பாட்டை நீக்க எடுத்த முடிவும் அதை நடைமுறைபடுத்த கையாண்ட விதம் கல்வெட்டில் பதியப்பெற்றுள்ளது. மன்னரின் கீர்த்தியுடன் தொடங்கும் அக்குறிப்பில் இருப்பது என்னவெனில் -ஊர் மக்களும் வணிகர்களுக்கும் நீர் தட்டுப்பாடு குறித்து மன்னனிடம் அறிவித்தமையால் அவ்வூர் எல்லையில் தேவி சிறை அணை மற்றும் அதற்க்கான வாய்க்காலை வெட்டிக்கொள்ளலாமென்றும், அவ்வாறு செய்யும்பொழுது கீழே உள்ள கோளூர் அணைக்கு (தற்போது குறிச்சி அணைக்கட்டு) சேதம் வராத படியும் அவ்வணை நிரம்பி வரக்கூடிய நீர் மேலே உள்ள தேவிசிறை அணைக்குச் செல்ல வேண்டுமென்றும், மேலும் இதில் நீர் கலப்பு அதாவது இடையில் யாரேனும் நீரை திருப்பும் செயல் புரிந்தால் அது தண்டனைக்குரிய குற்றமென ‘ கூறப்பட்டுள்ளது.

அணை கட்டி தண்ணீர் கொடுத்தாயிற்று, அத்தோடு நில்லாது கால்நடை மேய்த்து நாடோடிகளாய் அவ்வூரில் இருந்தோரை விவசாயம் செய்து அந்த பகுதியை செழிப்பாய் மாற்ற அவ்வூரின் எல்லையான மாளிகைப் பழநத்தம் என்ற ஊரை தானமாக கொடுக்க அவ்விடம் *புகலிடங்குடுத்த சோழ நல்லூரென* ஆனது.

தானமாக கொடுக்கப்பட்ட புன்செய் நிலங்களை தேவிசிறை அணைக்கட்டின் நீர் பாசானம் கொண்டு நன்செய் நிலங்களாய் மாற்றும் காலம் வரை வரிவிலக்கு கொடுக்கப்பட்டது மட்டுமல்லாது இவர்களுக்கு மன்றாட்டு முறையில் (ஊர் பகுதிகளில் தானமாக பெறப்படும் நிதி – இதில் பேரூர் மற்றும் குனியமுத்தூர் மன்றாட்டு ) நிதியும் தலைக்கு கம்பும் (குறிப்பிட்ட அளவையில்). இவ்வாறு முதல் மூன்று ஆண்டுகளுக்கும் நான்காம் ஆண்டு முதல் சிறு அளவில் வரி கட்ட ஊர் சபையில் தெரிவிக்கப்படுகிறது.

இது வீரராசேந்திரனின் அமைச்சர் பிரம்மராயனின் முன்னிலையில் சிபாதபிரியன் கல்வெட்டாக வடிக்கிறான்.

நம்காலத்திற்கு வருவோம். அடிமடைக்கு நீர் கொடுத்தபின் மேலே தண்ணீர் கொடுக்க தொலைநொக்குப் பார்வையில் நீர் மேலாண்மை திட்டத்தோடு ஆட்சி புரிந்த நம் தலைமையெங்கே.. இடைக்காலத்தில் நம் உரிமைக்கு இடை நிற்கும் இவ்வரசுகளும் நீதிசபையும் எங்கே..!!

அவர்கள் கற்றுக்கொடுத்த தர்மத்தை பின்பற்றாது இன்று தண்ணீர்க்காக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்.

மேலும் பல டி.எம்.சி தண்ணீர் நமது முன்னோர் ஏற்படுத்திய நீர் மேலாண்மையின் மூலம் சேமிக்க முடியும். அதைச் செய்தாலே நாம் யாரிடமும் கையேந்தாமல் நம் பகுதியை செழிக்க வைத்து தலைநிமிர்ந்து வாழலாம்.

*ஆம் நம் நீர் வழித்தடத்தை மீட்டு வாய்க்கால்,அணைக்கட்டு, குளங்களை காப்பாற்றினாலே போதும்; நம் குலம் காப்பாற்றப்படும்*

இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ள தேவிசிறை அணைக்கட்டின் இன்றைய நிலை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு பகுதி ஊருக்குட்பட்ட பஞ்சாயத்தின் குப்பைமேடாகவும் அறியாமையால் அணைக்கு வந்து சேரும் ஆற்றின் நீளத்தை சுருக்கி பாலம் கட்டியும் மணல் மேடாக்கி சிதைத்து விட்டோம். இதை மீட்டு நம் வரலாற்றுச் சின்னமாக மாற்றுவதோடில்லாமல் மீண்டும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நீர் பருகும் நாம் அனைவரும் நம் முன்னோரின் இச்செயல்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம். நீராதாரங்களை காப்பாற்றி அதை அடைப்போம்!!

– கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

(பேரூர் கோவில் மகா மண்டப வடக்குச்சுவர் கல்வெட்டுக்குறிப்பிலிருந்து)

நன்றி

இரா.மணிகண்டன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.