“ஏன்டா பக்கியாட்டம் அலயுறே ?” ஆமா இந்த பக்கி அப்புடின்னா என்னான்னு தெரிஞ்சிக்குவோம்..!

0 424

NightJar. ( Master of Camouflage…)
————————————————————–

ஒரு பொருள் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக ‘லோ லோ’என்று அலைபவனை “ஏண்டா பக்கியாட்டம் அலயறே ?” என்று கேட்பார்கள்.

பக்கி என்றே ஒரு பறவை உண்டு. அதுதான் ஆங்கிலத்தில் நைட்ஜார்(Nightjar) என்றழைக்கப் படும் பறவை. இதற்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் மற்றுமொரு பெயரும் உண்டு. தமிழில் பாதுகைக் குருவி என்றும் ஆங்கிலத்தில் கோட் ஸக்கர் (Goat sucker) என்றும் இதனை அழைக்கின்றனர் இப்பெயர்கள் காரணப் பெயர்கள். இது பற்றி பின்னர் பார்ப்போம்.

விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப்பட்ட பெயர் கேப்ரிமல்கஸ் ஏஷியாடிகஸ் (Caprimulgus asiaticus)என்பதாகும்.; கேப்ரிமல்கஸ் என்றால் லத்தீன் மொழியில் ஆட்டுப் பால் உரிஞ்சி என்று பொருள்.
பக்கி (nightjar), நடுத்தர அளவுள்ள மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும்பறவை ஆகும். இதற்கு பாதுகைக் குருவி என்ற இன்னொரு பெயரும் உண்டு ஏனென்றால் இது தரையில் உட்கார்ந்து இருக்கும்போது கவிழ்த்துப்போட்ட செருப்புபோல காணப்படும். இது நீண்டஇறக்கைகளும் குட்டைக் கால்களையும் சிறிய அலகினையும் உடையது.

பக்கி பகலில் படுத்துறங்கி இறவில் வெளிக் கிளம்பும் விட்டில் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் ஒரு பறவை.பறந்து கொண்டு இருக்கும் போதே பூச்சிகளைப் பிடிக்க லாயக்காக அகலமான வாயினையும், அலகின் இரு பக்கங்களிலும் பூனைக்கு மீசை முளைத்திருப்பதைப் போன்ற ரோமங்களையும் கொண்டது பக்கி.

இரவில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உட்கார்ந்திருக்கும் இப் பறவையின் கண்கள் காரின் விளக்கு வெளிச்சத்தில் சிவப்பு ஆபரணக் கற்கள் போன்று பிரகாசிக்கும்.காரின் விளக்கு ஒளியில் தென்படும் விட்டில் பூச்சிகளை பறந்து சென்று பிடித்துத் தின்னும்.
அவ்வாறு ரோடின் குறுக்கே பறந்து செல்லும் போது சில சமயம் காரில் அடிபட்டு விழுவதும் உண்டு

இப்பறவை படுத்துறங்குவது ஆற்றுப் படுகைகளிலும், தரிசல் காடுகளிலும் காணும் செடிகளின் அடியிலோ அல்லது மரக் கிளைகளிலோ. அப்படிக்கிளைகளில் உறங்கும் போது மற்றபறவைகளைப் போல குறுக்கு வாட்டில் உட்காராமல் நீள வாட்டில் உட்கார்ந்து தூங்கும்.; ஏன் தெரியுமா? அப்பொதுதானே மரப் பட்டையோடு ஒன்றி விடும் பக்கி மரக்கிளையில் உட்கார்ந்திருப்பது அதன் எதிரிகளுக்குத் தெரியாது.

உறக்கம் என்றால் ஆழ்ந்த நித்திரை அல்ல.இதன் கண் இமைகள் முற்றிலுமாக மூடி இருக்காது.சிறிய கீற்றாகத் திறந்திருக்கும்.; இவ்வாறு ஆழ் நித்திரை இன்றி உறங்குவதால் அருகில் சத்தமோ எதிரிகளோ நெருங்கினால் கிட்ட வரும் வரை அசைவின்றி இருக்கும் பக்கி திடீரெனப் பறந்து செல்லும்.

கருப்பு, கரும் பழுப்பு, பழுப்பு, வெளிர் பழுப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் கொண்ட இதன் சிறகுகள் இது வாழும் சுற்றுப்புறத்தோடு ஒன்றி விடுவதால் இதனைக் கண்டு பிடிப்பது மிகக் கடினம்.தனது மாய்மாலத்தில் கொள்ளை நம்பிக்கை பக்கிக்கு. அதனால் தான் கிட்ட நெருங்கும் வரை பறப்பதில்லை.

படுத்து உறங்கும் போது கவிழ்த்துப் போடப்பட்ட பாதுகை எனக் காணப் படுவதால் இதன் பெயர் பாதுகைக் குருவி என வந்திருக்க வேண்டும்.

நைட்ஜார் என்ற பெயர் ஒருகாரணப் பெயராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது இரவில் எழுப்பும் ஒலியான சக்…சக்…சக்…சர்ர்ர் என்பது காதுக்கு நாராசமாக இருக்கும்.

இரவு நேரங்களில் விட்டில் பூச்சிகளைத் தேடி ஆட்டுத் தொழுவங்களில் பறப்பதால் மேலை நாட்டவர் இப்பறவை ஆடுகளின் பாலை உரிஞ்சிக் குடிக்க வருவதாக எண்ணி இதற்கு ஆட்டுப் பால் உரிஞ்சி (Goat sucker) என்று பெயர் சூட்டினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.