எதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது

0 5,236

கேப்டவுன்: போட்சுவானா நாட்டில், தந்தத்துக்காக யானையை கொடூரமாக கொன்ற போட்டோவை, ட்ரோன் ஒன்று படம்பிடிக்க, அது உலகையே உலுக்கியதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்சுவானாவில் வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனத்துக்காக ஆவணப்படம் எடுக்க, ஐஸ்டின் சுலிவான் என்பவர், போட்சுவானா காட்டுபகுதியில் தனது ட்ரோனை பறக்க விட்டார்.

அப்போது இறந்து கிடந்த யானையின் சடலம் அவரது கண்ணில் பட்டது. யானையின் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு, ரம்பம் மூலம் துதிக்கை தனியாக துண்டிக்கப்பட்டு, தந்தம் வெட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது

அண்மையில், வரட்சியால் மாண்டு போன யானையைக் குறித்த பதிவு மிகுந்த கவலையைத் தோற்றுவித்தது. அப் பெருத்த உருவங்களின் உயிர் பிரியும் வலியை ஒருபோதும் இயற்கை தந்துவிட முடியாது. மனிதர்கள்தான் அவற்றைத் தோற்றுவிக்கிறார்கள். வரட்சி என்பது என்ன? அதைத் தோற்றுவிக்க நாம்தானே காரணமாகிறோம்? இயன்றவரை காடுகளை அழித்து, மழையைத் தடுத்து, மனிதக் குடியிருப்புக்களை உருவாக்கி விடுகிறோம். பாதைகளை, புகையிரதத் தண்டவாளங்களை நிர்மாணிக்கிறோம். அதுவரையில் தமது நிலங்களில் பத்திரமாக இருந்த யானைகள் இப் புதிய மாற்றங்களைக் கண்டு அரண்டு விடுகின்றன. அம் மிரட்சியே, அந்த ஜந்துக்களை முரட்டுத்தனமாகவும் மாற்றிவிடுகின்றன. தமது வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் எவற்றின் மீதும் இவ்விதமான முரட்டுத்தனங்களைப் பிரதிபலிப்பது, உயிர்ஜீவிகளின் இயல்பு இல்லையா?

இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலிருந்து யானை வேட்டை எனும் விளையாட்டு மிகப் பிரசித்தமானதாக இருந்திருக்கிறது. அதன் சித்திரங்களை வெளிநாட்டு சஞ்சிகைகளில் பிரசுரித்த பிரித்தானிய ஆளுநர்கள், யானை வேட்டைக்கு வெளிநாட்டுவாசிகளை வரும்படி ஈர்த்திருக்கிறார்கள். இவ் வேட்டைக்கு உதவியாக கிராம மக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ் வெள்ளையர்கள், கிராம மக்களின் உதவியோடு காட்டு யானைகளைக் கொன்று அதை ஒரு விளையாட்டாகவும், தம்மை வேட்டைக்கார வீரர்களாகவும் பிரதிபலித்து பெருமை கொண்டிருக்கிறார்கள்.

[யானை நூல்பதிவுகள்]

இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் ஒன்றான பதுளையில் பிரபலமான ‘St. Marks Anglican Church’ பள்ளியை நிர்மாணித்த Major Thomas William Rogers ( 1804 -1845) இலங்கையில் பாதைகளையும் நிர்மாணித்திருக்கிறார். என்றாலும், இப்போது அவர் இலங்கையில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்ற ஒரு கொலைகார வேட்டைக்காரனாகவே மக்களால் அறியப்படுகிறார். விலங்குகளைக் கொல்வதற்காக வேட்டைத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் முறையை பாமர மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததும் இவரே. உயிர் கொல்லும் ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தயங்கிய ஊர் மக்களிடம், ‘இதனைப் பயன்படுத்துவதன் மூலம் காட்டு விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்கலாம்’ எனப் போதித்திருக்கிறார். 1834 முதல் 1845 வரையான 11 வருட காலப்பகுதியில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்று அக் காலத்தில் பிரபலமான வேட்டைக்காரர் என அறியப்பட்ட இவர், இன்று வரலாற்றில் ஒரு கொலைகாரராகவே பதியப்பட்டிருக்கிறார். இவரது மரணமும் கூட, இயற்கை அளித்த தண்டனையாக, மின்னல் தாக்கியே நிகழ்ந்திருக்கிறது. இவரதும், இவரது யானை வேட்டைகள் குறித்த பிரசித்தமான சரித்திரங்களையும் ‘The Fate of Major Rogers: A Buddhist Mystery of Ceylon’, ‘The Wild Elephant in Ceylon’ ஆகிய தொகுப்புக்களில் வாசிக்கலாம்.

இப்போதும் கூட உலகில் யானை வேட்டை என்பது பணம் படைத்தவர்கள் பொழுதுபோக்காக விளையாடும் பெரும் விளையாட்டு. அண்மையில் இணையத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. உணவை மென்று கொண்டிருந்த யானையொன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீழ்த்தி, அதனருகே பிள்ளைகளோடு பெருமையோடு நின்று புகைப்படமெடுத்து தம்மை வீரர்கள் எனச் சித்தரிக்க முயலும் ஒரு தம்பதியின் புகைப்படம் அதிர்ச்சியைத் தந்தது. இப் படுகொலை மூலம் இவர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள்? தமது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒரு விலங்கைச் சுட்டிருக்கிறார்கள். அதன் உயிரைப் பறிக்க இவ்வாறானவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உலகில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும் கூட, அதனை மட்டுப்படுத்த அவற்றை வேட்டையாடுவது ஒன்றேதான் வழிமுறையா என்ன?

தனது சிறுவயது முதல் ஒரு நண்பனைப் போல, எனது வீட்டினருகே வளர்ந்து வந்த கொம்பன் யானை, சில வருடங்களுக்கு முன்னால் மின்னல் தாக்குதலில் பலியானது. தோட்டத்தில் அதைப் பிணைத்திருந்த சங்கிலியினூடாக மின்னல் பாய்ந்ததில் ஓர் மழை இரவில் அது மரித்து வீழ்ந்தது. அது மரணிப்பதற்கு சில தினங்களிற்கு முன்னர் நான் எடுத்த புகைப்படமே இங்கிருக்கிறது. அந்த யானை மரித்ததும், ஒரு விலங்கெனப் பார்க்காது, சடலத்தைப் பார்வையிட பல ஊர்களிலிருந்தும், பல இனங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். இறுதிச் சடங்குகள் மிகவும் சிறப்பாக சகல வித கௌரவத்தோடும் நடைபெற்றன. அனைத்து மக்களும் அந்தக் கொம்பனை நேசித்ததற்குக் காரணமிருக்கிறது.

[யானை செல்வந்தர்களின் கேளிக்கையும் வேட்டையும்]

குழந்தைகளை யானையின் மடியின் கீழால் கொண்டு சென்றால், அக் குழந்தைகளைப் பீடித்திருக்கும், பீடிக்கப் போகும் நோய், பிணி, இன்னல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பதாக மக்களிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. எனவே அதன் பிரகாரம் அந்த யானையின் பாதங்களுக்கிடையே ஊர் மக்களில் பெரும்பாலானோர் தம் சிறுவயதில் போய் வந்திருக்கிறார்கள். கண்ணீர் ததும்பிய முகங்களோடு அவர்கள் யானையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டமையானது, காலாகாலத்துக்கும் அவர்களின் இன்னல்களை நீக்கிய பெருமையை ஏதுமறியா அந்த அப்பாவி ஜீவன் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றியது.

இலங்கையில் யானைகளை வருடந்தோறும் நடைபெறும் ‘பெரஹர’ எனும் பௌத்த மதச் சடங்குகளில் பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் போலவே பட்டு வண்ணத் துணிகளாலும், பளபளக்கும் சிறு விளக்குகளாலும் யானைகளை அலங்கரிப்பார்கள். அவை பெருந்தெருவில் ஊர்வலமாகச் செல்லும். இந் நடைமுறை கேரளாவிலிருந்தே வந்திருக்கக் கூடும். ஒரு முரண்நகையாக இலங்கையின் பௌத்த மத ஊர்வலத்தின் முதல் யானைப் பாகன் ஒரு முஸ்லிம். உமர் லெப்பை பணிக்கர் என அறியப்படும் அவரதும், யானையினதும் புகைப்படங்களை இலங்கையின் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டதன் மூலம் கடந்த நூற்றாண்டு முதல் பல தசாப்தங்களாக கௌரவித்து வருகிறது இலங்கை அரசு.

[ரயிலில் கிணற்றில் யானைகளின் சாவு]

இலங்கையில் புகையிரதங்களில் மோதுண்டு இறந்துவிடுபவை, அதிவேகப் பாதை வாகனங்களில் மோதி இறப்பவை, பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுந்து இறப்பவை, மக்கள் குடியிருப்புக்களில் அத்துமீறி நுழைவதால் மின்சார வேலியும், கண்ணிவெடிகளும், வெடிகுண்டுகளும் கொல்பவை என வருடத்துக்கு குறைந்தது நூறு யானைகளேனும் அகாலமாக மரணித்து விடுகின்றன. தந்தத்துக்காகக் கொல்லப்படுவது சம்பந்தமான யானைகளின் மரண அறிக்கைகள் முன்பு நிறைந்திருந்தன. தற்போது அந்த நிலைமை குறைந்திருக்கிறது. அறவே இல்லையென்று சொல்வதற்கில்லை.

ஆனால் தற்காலத்தில் இலங்கையில் யானைகளின் மரணங்கள் அதிகமாக நிகழ்வது ஆயுதங்களால் அல்ல. யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத, நலிவடையாத குப்பைகள் அண்மைக்காலமாக யானைகளை மரணத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கையின் வனங்களில் சஞ்சரிக்கச் செல்லும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் காடுகளில் விட்டு வரும் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை யானைகளால் உணவாகக் கொள்ளப்படுகின்றன. யானைகளால் விழுங்கப்படும் அவை செரிக்காது, உடலிலிருந்து வெளியேறாது அடைத்துக் கொண்டு யானைகளைக் கொன்று விடுகின்றன. அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மரணித்த யானைகளின் வயிற்றைக் கிழித்துப் பார்த்து இதனை உறுதிப்படுத்த முடிந்தது.

[இறந்த யானை உடலின் பிளாஸ்டிக் கழிவுகள்]

என்னதான் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல அறிக்கைகள் விடப்பட்ட போதிலும், இலகுவையும் வசதியையும் கருத்திற்கொண்டு, எங்கேயோ வீசி விட்டு வருவதற்குத்தானே என்ற மனப்பாங்கோடு அநேகமான மக்கள் இன்னும் அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வலிய விலங்கு என்பதனால் யானையின் மரணம் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. பொலிதீன், பிளாஸ்டிக்கை உட்கொண்டு தினந்தோறும் எத்தனை எத்தனையோ வன விலங்குகளும், பட்சிகளும், மீன்களும், ஆமைகளும் நாமறியாது மரித்துக் கொண்டேயிருக்கின்றன.

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல, இயற்கையோடு இணைந்து வாழும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடிய மரணத்தை ஒருபோதும் இயற்கை அளிப்பதில்லை. நாம்தான் அவற்றின் மரணத்துக்குக் காரணமாக இருந்துகொண்டிருக்கிறோம். மரிக்கும் அந்த உயிர்களின் மூலமாகப் பாடம் கற்று, இனி எந்தவொரு உயிரும் அவ்வாறு மரிக்காதிருக்க, நீதமான எந்தவொரு தீர்ப்பையும் வழங்க யாருமேயில்லை என்பதுதான் நிஜம். காட்டு யானைகளைக் கொல்தல் என்பது செல்வந்தர்களுக்கு ஒரு வீர விளையாட்டு. விவசாய நிலங்களைக் கொண்ட ஏழைகளுக்கு ஒரு ஆபத்து நீங்கல். படித்தவர்களுக்கு அக் கணத்தைக் கடந்துபோக ஒரு செய்தி மாத்திரமே.

– எம்.ரிஷான் ஷெரீப்

You might also like

Leave A Reply

Your email address will not be published.