உழவர்கள் அழியத் துவங்கினர். இதேமுறையில்தான், நெசவாளர்கள் நலிந்தனர். இதேபோல்தான் நகைத் தொழிலாளர்கள் மறைந்தனர்.

0 445

பனைத் தொழில் அழிவின் விளிம்பிற்குச் சென்று, மீண்டு வருகிறது. பனைக் கொட்டைகளை விதைக்கும் வழக்கம் மரபுவழிச் சிந்தனையாளர்களிடையே பரவியுள்ளது. ஐயா நம்மாழ்வார் பனை மீதான நன்மதிப்பைச் சமூகத்தில் உருவாக்கி வளர்த்தார். அவர் காலத்திற்குப் பின்னர், அவரால் உருவாக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோர் பனைப் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனைப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் மக்கள் கூட்டம் பெருகியுள்ளது. பனை மீட்சிக்கு இது மிக அடிப்படையான காரணம். பனைக் காப்பில் வேறு பலரும் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.

இவையெல்லாம் நல்மாற்றங்கள். ஆயினும், பனைத் தொழிலில் உள்ள நெருக்கடிகள் நம்மால் சிந்திக்கவும் இயலாதவை.பனை ஏறுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. பனை ஏறுவோர் இழிவாக நடத்தப்படும் போக்கு இன்றும் உள்ளது. கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்ட பின்னர், பனை மரங்கள் எல்லாம் குற்ற நடவடிக்கைக்கான களங்களாக மாற்றப்பட்டுள்ளன. பனை ஏறிகள் மீதான காவல்துறைக் கண்காணிப்பு வரம்பற்றதாக உள்ளது. ஒரு பனையேறி, ஒரு நாளைக்கு ஏறத்தாழ பத்து மரங்களில் ஏறிப் பதநீர் இறக்குகிறார். ’அவர் பதநீர் இறக்கவில்லை, கள் இறக்குகிறார்’ என்று காவல்துறையினர் சந்தேகப்பட்டால், அதே பனையேறி மீண்டும் அதே பத்து மரங்களிலும் ஏறி, கலயங்களில் உள்ளது பதநீர்தான் என்று காவல்துறை முன்னிலையில் காட்ட வேண்டும்.

பனையேறிக் குடும்பத்தில் திருமண உறவுகொள்வது மதிப்புக் குறைவான செயலாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் போன்ற சித்தரிப்பு ஒருபுறம், செய்யும் தொழில் மீதான அவமதிப்புகள் மறுபுறம் என்ற வேதனையில்தான் ஒவ்வொரு பனையேறிக் குடும்பமும் வாழ்க்கை நடத்துகிறது. பனையேறிகள் தங்கள் அடுத்த தலைமுறையை நகரங்களை நோக்கித் தள்ளுகிறார்கள். பெரும்பாலான பனையேறிகளின் பிள்ளைகள் நகரச் சமூகத்திற்கு நகர்ந்துவிட்டார்கள். இப்போது பனை மரம் ஏறிக்கொண்டிருப்போரில் பெரும்பகுதியினர், ஐம்பது வயதைக் கடந்தவர்கள்தான்.

பனைக் கருப்பட்டி விற்பனை கொடிக்கட்டிப் பறக்கிறது. பனையேறிகள் வாழ்க்கையோ இன்னும் வறுமையில் உழல்கிறது. கருப்பட்டிக்கு உரிய விலை , அதை உற்பத்தி செய்வோருக்குக் கிடைப்பதில்லை. எல்லாத் தொழில்களிலும் உள்ளதுபோல, பனைத் தொழிலிலும் கடன் சுமை அதிகரித்துள்ளது. கலப்படம் செய்யப்பட்ட கருப்பட்டியை விற்போர் மாநகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றனர். தூய கருப்பட்டி உற்பத்தியாளர்கள் உரிய விலை கிடைக்காமல் தவிக்கின்றனர். இப்படித்தான் உழவர்கள் அழியத் துவங்கினர். இதேமுறையில்தான், நெசவாளர்கள் நலிந்தனர். இதேபோல்தான் நகைத் தொழிலாளர்கள் மறைந்தனர்.

மரபுத் தொழில்கள் நசுக்கப்படும் முறை இதுதான்.

1. மரபுத் தொழிலில் ஈடுபட்டால், சமூகத்தில் மரியாதை இழப்பு நேரும்.

2. மரபுத் தொழில் செய்தால், வருவாய் கிடைக்காது.

3. மரபுத் தொழில் செய்தால், கடனில் மூழ்க வேண்டும்.

4. மரபுத் தொழில் செய்வோர், இடைத்தரகர்களால் சுரண்டப்பட வேண்டும்.

5. மரபுத் தொழிலுக்கான இயற்கை வளங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருநிறுவனங்களிடம் விட்டுத் தருவதுதான் ஒரே வழி.

பனைத் தொழில் இந்த ஐந்து சிக்கல்களிலும் மூழ்கிக்கொண்டுள்ளது.

நம்மோடு வாழும் எல்லாச் சமூகங்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு துண்டு பனைவெல்லத்திலும் அதைக் காய்ச்சிய குடும்பத்தினரின் அவமானங்களும், வறுமையும் கலந்துள்ளது. அவர்களது வேதனைகளைப் பகிர்ந்துகொள்ளாமல், அவர்களிடமிருந்து வரும் உணவை மட்டும் உண்பது மனிதப் பண்பல்ல.

பனை ஏறிகளுக்கான ஒத்துழைப்புகளை நாமே நேரடியாகச் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். பனை மரங்களைச் சுத்தம் செய்வது, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனைப் பொருட்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் நாம் இறங்க வேண்டும் என விரும்புகிறேன்.

இராமநாதபுரத்தில், மாசி மாதம் பாளைகள் முளைக்கத் துவங்கும் என்கின்றனர். மாசி மாதத்தில் இப்பணிகளைச் செம்மை ’பனைப் பணி’ என்ற செயல்திட்டத்தில் துவக்குகிறோம். இரண்டு நாட்கள் பனை மக்களோடு தங்கி அவர்களது பணிகளில் உதவி செய்வது நோக்கம். இத்திட்டத்தின் துவக்கம்தான் இது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளன.

பனைப் பணியில் விருப்பம் கொண்டோர் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். இராமநாதபுரம் பொதுச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட பகுதிகளில் ஒன்று. ஏற்கெனவே, செம்மை அகல் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் பகுதி அரசுப் பள்ளிக்கு மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்துக் கொடுத்தோம். சென்னை, பெங்களூரு மரபுக் கூடல் நிகழ்வுகளில் விற்பனை செய்ப்படும் பனைக் கருப்பட்டி, இராமநாதபுரத்திலிருந்துதான்பெரும்பான்மை கொள்முதல் செய்யப்படுகிறது.

சிறுவர்களுக்கு இப்போதிருந்தே நம் பனைகளையும், பனைபோன்ற வலிமைகொண்ட பனையேறிகளையும் அறிமுகம் செய்வோம். நம் தலைமுறையின் தொடர்ச்சி, பனையேறிகளுக்கு மதிப்பளிப்பதாக உருவாகட்டும்!

பனைப் பணித் திட்டத்தில் இணைய விரும்புவோர் செம்மைப் பொறுப்பாளர்களுடன்

தொடர்புகொள்ளுங்கள்.

இளவேனில்: 99620 73174

சாமிநாதன்: 80123 25499

அன்புடன்,

ம.செந்தமிழன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.