இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு… எட்டாவது பெயிலுக்கு… ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?

0 3,959

வாழைத்

தோட்டத்திற்குள்

வந்து முளைத்த…

காட்டுமரம் நான்..!

எல்லா மரங்களும்

எதாவது…

ஒரு கனி கொடுக்க ,

எதுக்கும் உதவாத…

முள்ளு மரம் நான்…!

தாயும் நல்லவள்…

தகப்பனும் நல்லவன்…

தறிகெட்டு போனதென்னவோ

நான்…

படிப்பு வரவில்லை…

படித்தாலும் ஏறவில்லை…

இங்கிலீஷ் டீச்சரின்

இடுப்பைப் பார்க்க…

இரண்டு மைல் நடந்து

பள்ளிக்கு போவேன் .

பிஞ்சிலே பழுத்ததே..

எல்லாம் தலையெழுத்தென்று

எட்டி மிதிப்பான் அப்பன்…

பத்து வயதில் திருட்டு…

பனிரெண்டில் பீடி…

பதிமூன்றில் சாராயம்…

பதினாலில் பலான படம்…

பதினைந்தில்

ஒண்டி வீட்டுக்காரி…

பதினெட்டில் அடிதடி…

இருபதுக்குள் எத்தனையோ…

பெண்களிடம் விளையாட்டு…

இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு…

எட்டாவது பெயிலுக்கு…

ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?

மண்லாரி ஓட்டினால் லோடுக்கு…

நூறு தருவார்கள .

வாங்கும் பணத்துக்கு…

குடியும் கூத்தியாரும் என…

எவன் சொல்லியும் திருந்தாமல்…

எச்சிப் பிழைப்பு பிழைக்க …

கை மீறிப்

போனதென்று…

கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .

வேசிக்கு காசு

வேணும் …

வருபவள் ஓசிதானே…

மூக்குமுட்டத் தின்னவும்…

முந்தானை விரிக்கவும்…

மூன்று பவுனுடன் …

விவரம் தெரியாத ஒருத்தி…

விளக்கேற்ற வீடு வந்தாள் .

வயிற்றில் பசித்தாலும்…

வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்…

வக்கணையாய் பறிமாறினாள்…

தின்னு கொழுத்தேனே தவிர…

மருந்துக்கும் திருந்தவில்லை…

மூன்று பவுன் போட

முட்டாப் பயலா நான்…

இன்னும் ஐந்து வேண்டுமென்று ,

இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க …

கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,

நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,

சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க…

மாமனாரான மாமன்…!

பார்த்து வாரமானதால்…

பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,

தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்…

சிறுக்கிமவ .

இருக்கும் சனி…

போதாதென்று

இன்னொரு சனியா..?

மசக்கை என்று சொல்லி…

மணிக்கொரு முறை வாந்தி..,

வயிற்றைக் காரணம் காட்டி…

வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,

சாராயத்தின் வீரியத்தால்…

சண்டையிட்டு வெளியே அனுப்ப..,

தெருவில் பார்த்தவரெல்லாம்

சாபம் விட்டுப்

போவார்கள் .

கடைசி மூன்று மாதம்…

அப்பன் வீட்டுக்கு

அவள் போக..,

கறிவேப்பிலைக்காரி ஒருத்தி…

வாசனையாய் வந்து போனாள்..,

தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக…

தகவல் சொல்லியனுப்ப..,

ரெண்டு நாள் கழித்து…

கடமைக்கு எட்டிப் பார்த்தேன்…

கருகருவென

என் நிறத்தில்…

பொட்டபுள்ள..!

எவன் கேட்டான் இந்த மூதேவியை… ?

‘கள்ளிப் பால் கொடுப்பாயோ …

கழுத்தை திருப்புவாயோ…

ஒத்தையாக வருவதானால் …

ஒரு வாரத்தில்

வந்து விடு ‘

என்று சொல்லி திரும்பினேன் .

ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை…

அரசாங்க மானியம்

ஐயாயிரம்…

கிடைக்குமென்று

கையெழுத்துக்காகப்

பார்க்கப் போனேன் ,

கூலி வேலைக்குப் போனவளைக்

கூட்டி வரவேண்டி…

பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல…

ஆடி நின்ற ஊஞ்சலில்…

அழுகுரல் கேட்டது..,

சகிக்க முடியாமல்

எழுந்து …

தூக்கினேன் …

அதே அந்த பெண்

குழந்தை..!

அடையாளம் தெரியவில்லை …

ஆனால் அதே கருப்பு…

கள்ளிப் பாலில்

தப்பித்து வந்த அது ,

என் கைகளில் சிக்கிக் கொண்டது..,

வந்த கோபத்திற்கு…

வீசியெறியவே தோன்றியது…

தூக்கிய நொடிமுதல்…

சிரித்துக் கொண்டே இருந்தது,

என்னைப் போலவே…

கண்களில் மச்சம்,

என்னைப் போலவே

சப்பை மூக்கு,

என்னைப் போலவே

ஆணாகப்..,

பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க

வேண்டியதில்லை…,

பல்லில்லா வாயில்…

பெருவிரலைத் தின்கிறது,

கண்களை மட்டும்..,

ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,

ஒரு கணம் விரல் எடுத்தால்…

உதைத்துக் கொண்டு அழுகிறது,

எட்டி… விரல் பிடித்துத்..

தொண்டை வரை வைக்கிறது,

தூரத்தில்

அவள் வருவது கண்டு…

தூரமாய் வைத்து விட்டேன்…

கையெழுத்து வாங்கிக்கொண்டு…

கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,

முன் சீட்டில் இருந்த குழந்தை…

மூக்கை எட்டிப் பிடிக்க

நெருங்கியும்…

விலகியும் நெடுநேரம்…

விளையாடிக் கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு …

தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட

கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்…

போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை…

என்ற பொய்த்தனத்தோடு ,

இன்னொரு கையெழுத்துக்கு…

மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு,

அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம்,

சப்பை மூக்கு…

பல்லில்லா வாயில்

பெருவிரல் தீனி…

ஒன்று மட்டும் புதிதாய் …

எனக்கும் கூட

சிரிக்க வருகிறது …

கடைசி பஸ், ஆனால் பேருந்தில்…

எந்த குழந்தையும் இல்லை .

வீடு நோக்கி நடந்தேன்,

பாதி வழியில் கறிவேப்பிலைகாரி…

கைப் பிடித்தாள்

உதறிவிட்டு நடந்தேன்…

தூக்கம் இல்லை

நெடுநேரம்…

பெருவிரல்

ஈரம் பட்டதால் …

மென்மையாக

இருந்தது …

முகர்ந்து பார்த்தேன் ….

விடிந்தும் விடியாததுமாய்…

காய்ச்சல் என்று சொல்லி…

ஊருக்கு

வரச் சொன்னேன்,

பல்கூட விளக்காமல் …

பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,

பஸ் வந்ததும் லக்கேஜை

காரணம் காட்டி…

குழந்தையைக் கொடு என்றேன் !

பல்லில்லா வாயில் பெருவிரல் !

இந்த முறை பெருவிரலைத் தாண்டி… ஈரம் எங்கோ

சென்று கொண்டு இருந்தது…

தினமும் என் மீது படுத்துக்கொண்டு…

பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து

அவளைக் காப்பாற்ற…

நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு…

மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் …

சிகரெட் ஒரு முறை..,

சுட்டு விட்டது

விட்டு விட்டேன்…

சாராய வாசனைக்கு…

வாந்தியெடுத்தாள் …விட்டு விட்டேன்,

ஒரு வயதானது …

உறவுகளெல்லாம்…

கூடி நின்று ,

‘அத்தை சொல்லு ‘

‘மாமா சொல்லு ‘

‘பாட்டி சொல்லு ‘

‘அம்மா சொல்லு ‘என்று…

சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்…

எனக்கும் ஆசையாக இருந்தது,

‘அப்பா ‘சொல்லு

என்று சொல்ல,

முடியவில்லை ……

ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை…

அவள் சொன்ன முதல் வார்த்தையே…

‘அப்பா’தான்!

அவளுக்காக எல்லாவற்றையும்…

விட்ட எனக்கு ,

அப்பா என்ற

அந்த வார்த்தைக்காக…

உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

இந்த சாக்கடையை…

அன்பாலேயே கழுவினாள்…

அம்மா சொல்லித் திருந்தவில்லை,

அப்பா சொல்லித் திருந்தவில்லை ,

ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,

நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,

நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத …

இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..

வளர்ந்தாள்..,

நானும் மனிதனாக வளர்ந்தேன்…

படித்தாள்,

என்னையும் படிப்பித்தாள்…

திருமணம்

செய்து வைத்தேன் ,

இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,

இரண்டு குழந்தைகளுமே…

பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,

நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,

என்னை மனிதனாக்க…

எனக்கே மகளாய் பிறந்த…

அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது …

#இந்த_கடைசி_மூச்சு..!

ஊரே ஒன்று கூடி..,

உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத் தெரியாதா என்ன?

யாருடைய பார்வைக்கப்புறம்…

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்…

………………….வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,

என் பெருவிரலை யாரோ

தொடுகிறார்கள் ,

அதோ அது அவள்தான்,

மெல்ல சாய்ந்து …

என் முகத்தை பார்க்கிறாள் …

என்னைப் போலவே…

கண்களில் மச்சம்,

சப்பை மூக்கு,

கருப்பு நிறம்,

நரைத்த தலைமுடி,

தளர்ந்த கண்கள்,

என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,

‘அப்பா அப்பா’ என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,

அவள் எச்சில்

என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ…

ஒவ்வொரு புலனும் துடித்து…

#அடங்குகிறது………………..

…………………..

“தாயிடம் தப்பி வந்த

மண்ணும்…

கல்லும்கூட ,

மகளின் …

கை பட்டால் காந்தச் சிலையாகும்! ”

எழுதியவர் யார் என்று தெரியவில்லை.
நன்றிகள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.