இன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான் நடுகிறார்ள் இது சரியா..?

0 1,087

இன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான் அதிகம்!

ஆனால், எல்லா மண்ணிலும், பனை மரமே சரிப்படாது!

இடத்தின் மண்ணுக்கேற்ப, பல்வேறு மரங்கள் மாறுபடும்!

மரம் வளராமைக்கு என்ன காரணம்? = மண்ணின் தன்மை அறியாமல், நம் விருப்பத்துக்கு நடுவதே!

1. எந்த எந்த மண்ணில், எந்த எந்த மரத்தை நட்டால் வளரும்?

2. அப்படியே வளர்ந்தாலும், அவை வேர்ப் பிடிப்பான் ஆகுமா? ஆகாதா?

இந்த 2ஆம் பகுதி/நிறைவுப் பகுதியில், இதனைக் காணலாம் வாங்க!

ஆற்றங் கரை நிலங்கள்:

1. காஞ்சி மரம்

ஆற்றங்கரை நிலத்துக்கு, மிக மிக உகந்தது= காஞ்சி மரமே!

இதை, சங்கத் தமிழ் நூலான, “மலைபடுகடாம்” உறுதி செய்யும்!

புல் அரைக் “காஞ்சி”, புனல் பொரு புதவின்,

மெல் அவல், இருந்த ஊர்தொறும், நல் யாழ்ப்

பண்ணுப் பெயர்த்தன்ன, காவும் பள்ளியும் (- மலை படு கடாம்)

ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த காஞ்சி மரங்கள், மண்ணை இறுக்கி, வெள்ளம் ஊருக்குள் வராதவாறு, காத்து உதவின!

அட, இதெல்லாம் கூடச் சங்கத் தமிழில் இருக்கா?:)

ஆமாம்! பொய்யான புராணங்கள் இன்றி, ஆதிச் சங்கத் தமிழ் முழுதும்= இயற்கை இயைந்த வாழ்வே!

நாம் தான்.. தன்னலப் பேராசையால் தொலைச்சிட்டு நிக்குறோம்:(

சரி, காஞ்சி மரம்= பார்க்க எப்பிடி இருக்கும்? நான் பார்த்தது கூட இல்லையே!

எனக்குத் தெரிஞ்ச “காஞ்சி” எல்லாம்.. காஞ்சிபுரம் தான்.. என்று முணுமுணுக்கிறீங்களா?:) உங்களுக்காக, படங்களும்.. இணைத்துள்ளேன்!

பதிவின் இறுதி அட்டவணையில், Botanical Name எ. புதலியல் பெயரையும் சேர்த்துள்ளேன்; இவற்றை மேலும் Googleஇல் விரிவாய்த் தேட, இப் பெயர்கள் உங்களுக்கு உதவும்!:)

காஞ்சிப் பூ= தமிழ்ப் புறத் திணைகளில் ஒன்று! படை நடத்திச் செல்லும் போர் வீரர்கள் அணிவது! Sort of a Dress Code for easy identification

தமிழின் அகத்திணை= 7! அதில் 4 திணைகளும்= பூக்களே!

*முல்லை

*குறிஞ்சி

*மருதம்

*நெய்தல்..

தமிழின் புறத்திணை 7! அதில் 5 திணைகளும்= பூக்களே!

*வெட்சி x கரந்தை

*வஞ்சி x காஞ்சி

*உழிஞை x நொச்சி

*தும்பை

*வாகை

இப்படி, அகமும்/ புறமும்= இயற்கையோடு இயைந்த வாழ்வு!

2. இலுப்பை மரம்

ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப் பூ சர்க்கரை போல -என்ற பழமொழி கேட்டிருப்பீங்க!

அதன் பூவும்/பழமும் லேசான தித்திப்பு! அதான்:)

படத்தில் காண்க, இலுப்பைப் பூவை!

இந்த மரமும்.. ஆற்றங்கரையில், வேர்ப்பிடிப்பான்/ மண்பிடிப்பான்!

3. நாவல் மரம்

நாவல் பழத்தின் ஊதா நிறமே, அப்படியொரு அழகு!

நிறத்துக்கு மேல் அதன் சுவை!

சுவைத்த பின், நாக்கிலே நிற்கும் ஊதா நிறத்தைக் காட்டி மகிழும் இன்பம்:)

ஆனால், இவையும் தாண்டி.. நாவல் மரம், ஆற்றங்கரை மண்ணைப் பலப்படுத்தும்!

அதன் வேர்கள் அப்படி! சல்லி வேராய் இல்லாத ஆணி வேர்!

சங்கத் தமிழில், முன்பு பார்த்தோமே?

பத்துப் பாட்டுள் ஒன்றான அதே “மலைபடுகடாம்”! அது, இந்த மரத்தின் திண்மை பற்றியும் பேசுகிறது!

காலின் உதிர்ந்தன, கருங் கனி “நாவல்”

மாறு கொள ஒழுகின ஊற நீர் உயவை (- மலைபடுகடாம்)

நாவல் மர இலைகள்

4. பெருமூங்கில்

மூங்கில், நம் அனைவருமே அறிந்த ஒன்று தான்!

ஆனால் அது மரம் அல்ல! புல்:)

அதன் வேர்கள் மெல்லியவையே! ஆனால் 2-3 அடி ஆழம் கூடப் போகும்! மண்ணை இறுக்கிக் காக்கும்!

பொதுவாகவே, எல்லா நீர்நிலைக் கரைகளுக்கும், மூங்கில் உகந்ததே!

ஆறு/ஏரி ஒட்டி விளையும் மூங்கில் காடுகள், தமிழ் இலக்கியங்களில் அதிகம் காணலாம்!

“பணைத்” தோள் -ன்னு சொல்லுவோம் அல்லவா?

பணை= மூங்கில், பனை= பனை மரம்!

மூங்கிலுக்கு மூனு சுழி:)

“கழை” என்ற பேரும், மூங்கிலுக்கு உண்டு! அதே மலைபடுகடாம் நூல், ஆற்றின் திண்மையைப் பற்றிப் பாடும் போது.. மூங்கில் காட்டைக் காட்டும்!

கடும்பறைக் கோடியர் மகாஅரன்ன

நெடுங்”கழைக்” கொம்பர்க் கடுவன் உகளினும் ( -மலைபடுகடாம்)

ஏரிக் கரை நிலங்கள்:

1. பனை மரம்

பனை = தமிழ் நாட்டின் அடையாள மரம்!

எப்படி, கேரளத்துக்கு= தென்னை செல்லமோ,

தமிழகத்துக்கு= பனை செல்லம்:)

பனை மரத்தின் வேர்கள், அகலப் பரவாது, ஆழப் பரவும்!

இதனால், ஏரிக்கரை மண்ணை, அடிவரை சென்று, இறுக்கிப் பிடிக்கும்!

தமிழகத்தின்.. பல ஏரிகள், கண்மாய்கள், வயல்களை ஒட்டிப், பனை மரங்களே அதிகம் காணப்படும்!

நெய்தல் நிலமான, கடலோரத்திலும் பனை மரங்கள் உண்டு! திருச்செந்தூர்ப் பனை மரங்கள்/ பனங் கருப்பட்டி, அந்த முருகனை விட இயற்கை அழகு!:)

பனைக்கு= பெண்ணை/ போந்தை என்ற வேறு பெயர்களும் உண்டு!

கழனி/ ஏரி ஒட்டி வளரும் பனை மரங்களை..

பட்டினப் பாலை என்னும் சங்கத் தமிழ் இலக்கியம், விரிவாகக் காட்டும்!

இனம் மாவின் இணர் “பெண்ணை”

முதல் சேம்பின் முளை இஞ்சி

விளைவு அறா வியன் கழனி (- பட்டினப் பாலை)

பனம் பூ = வண்டு வந்து உட்காராது!

ஏன்னா, அதில் வாசம் மட்டுமே, தேன் இருக்காது!

மகரந்தச் சேர்க்கை= காற்றில் தான்!

இதையும், சங்கத் தமிழே படம் பிடிச்சிக் காட்டும்!

வண்டு இசை கடவாத் தண் “பனம் போந்தை”

(- பதிற்றுப் பத்து)

ஆண் பனை தனி; பெண் பனை தனி;

காற்று வீசுவதால் மகரந்தம் பரவி பெண் பனையில் விழும், காய்க்கும், பழுக்கும்! சேரனின் மாலை= பனம் பூ மாலை!

* பனை மரம், வளரும் போதே, அந்த இளங் குருத்து சுவையா இருக்கும்!

* பாளையில், பால் விடும் போது = பதநீர்

* கலத்தில் சுண்ணாம்பு கலவாம, ஊற வச்சா = கள்ளு!

* பால் விட்ட பின், காய் = பனங்காய்

* அதுக்குள்ள, இளசு இளசா = நுங்கு!

* காய் முத்தினா = சேவாய்!

* அப்பறம் பனம் பழம் = நார் நாரா இருக்கும்!

* பனம் பழக் கொட்டைக்குள்ள இருப்பது= சீப்பை

பனம் பழத்தை, அப்படியே விட்டுட்டோம்-ன்னா = பழச் சதையெல்லாம் தளர்ந்து போய், உள்ளாற = பனங் கிழங்கு!

பனை வெல்லம் & பனாட்டு என்னும் பனங் கருப்பட்டி!

பனை ஓலை = விசிறி, பொருள் மடிக்கும் பொட்டலம், Whistle ன்னு என்னென்னமோ செய்யலாம்! குருத்தோலைப் பெட்டி-ம்பாய்ங்க!

பனையோலை, அடுப்பெரிக்கவும் உதவும்! கூரை போடவும் உதவும்! பனந் துண்டம் மிக்க வலுவுள்ளது!

பனை மரம், நிழலே தராது-ன்னு.. நிழலே தராதவர்கள் தான் குத்தஞ் சொல்லுவார்கள்:)

ஆனால், மேற்கண்ட படி, தன்னிடம் உள்ள “எல்லாமே” தரும்= பனை மரம்! ஏரிக் கரைகளின் மாபெரும் தோழன்!

2. மூங்கில்

மூங்கில் பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஆற்றங் கரைப் பகுதியில்!

3. வேல மரம்

முக்கியக் குறிப்பு: இது “சீமைக் கருவேல மரம்” எ. வேலிகாத்தான் அல்ல! அது மண்ணுக்கே நஞ்சு! தண்ணியை மண்ணுக்குள் போக விடாத சல்லி வேர்கள்!

வெளிநாட்டவர்களால் இறக்குமதி செய்யப்பட்டு, வேலி போடவும், அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தத் துவங்கி..

தமிழக மண்வளத்தையே நாசம் செய்த பயிர், இந்தச் சீமைக் கருவேல மரம்! கேரளத்தில், இதுக்குத் தடை!

நாம் சொல்வது: நல்ல கருவேலம்= “நாட்டுக்” கருவேலம்!

ஆலும் “வேலும்” பல்லுக்குறுதி என்பார்களே, அந்த வேல மரம்!

வேல மரம்= முட்கள் நிறைந்தது!

வேலிகாத்தானும் முள்ளே எனினும், நமது நாட்டுக் கருவேலம்= அதை விட, சற்று உயரம் குறைவே!

ஆணி வேர்கள் உடையது! வைரம் பாய்ந்த கருமை கொண்டது! செல்லரித்து உளுத்துப் போகாது!

நம் வேல மரத்தின் பிஞ்சுக் கிளை/ குச்சிகளே= ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!

ஆடு போன்ற மேய்ச்சல் விலங்குகளுக்கும், இதன் இலை/தழைகள் மிகவும் பிடிக்கும்! பறவைகளும் வந்து அமரும்!

(வேலி காத்தானில், இதெல்லாம் கிடையாது! வேறெந்த உயிரையும் அண்டவிடாது, தானே உறிஞ்சிக் கொள்ளும்/ கொல்லும்!)

அற்பமான காரணங்களுக்காக, விறகு/ சுள்ளி/ வேலிக்காக, வேலிகாத்தான் மரங்கள், தமிழகத்தில் பரவி விட்டன!

இதை அழிப்பதும் கடினம்! இயந்திரங்கள் கொண்டே, “முழுமையாக” அழிக்க முடியும்! இல்லையேல் மீண்டும் மீண்டும் பரவும்!

ஏரிக் கரையோரம், “நாட்டுக் கருவேல மரம்” வளர்க்கச் சொல்லிற்று சங்கத் தமிழ் என்பதற்காக..

வேறுபாடு தெரியாமல், “சீமைக் கருவேல மரத்தை” வளர்த்து விடாதீர்கள்! எச்சரிக்கை!

அப்படிச் செஞ்சா, அதோ கதி தான்!

அதன் சல்லி வேர்கள், தண்ணியைக் கீழேயே போகவிடாது, மேல் பரப்பிலேயே பரவி, மண்ணரிப்பு ஏற்பட்டு, ஏரி தான் உடையும்! எச்சரிக்கை!

குளக் கரை நிலங்கள்:

1. நாவல் மரம்

நாவல் பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஆற்றங் கரைப் பகுதியில்!

2. புளிய மரம்

புளிய மரமும், புளியாங்காயும் அறியாதார் யார்?:)

இதன் அழகே, குளத்தோரத்தில் வளரும் போது, நிழல் + சில்லுணர்ச்சி, ஒருங்கே கிடைப்பது தான்!

பேருந்தில் செல்லும் போது, சாலையோரப் புளிய மரங்களின் மகிமை அறிவோம் தானே?:)

வெறும் நிழல் மட்டுமல்ல!

புளிய வேர்கள், ஆணி வேர் போல் ஆழமும் பரவும்; அதே சமயம் அகலமும் பரவும்!

ஏரி போல்.. சாய்மானம் இல்லாக் கரைகளை உடைய குளத்தங் கரைகளுக்கு ஏற்ற மரம்!

புளி உலுக்குதல் என்பதே அழகான விளையாட்டு!:)

விளையாட்டு-ன்னுவுடன் நினைவுக்கு வருது!

புளியங்கொட்டை வைத்து விளையாடாதவர் யார்?:) அதுவும் பல்லாங்குழி, ஒத்தையா ரெட்டையா?.. எத்தனை எத்தனை விளையாட்டு!

புளியம் பூ, புளியம் இலையைக் கூடத் தின்னுருக்கோம்:) ரொம்ப மகிமை வாய்ந்த புளிய மரம்!

புளியும், மிளகும் தான், தமிழ்ச் சமையலின் அடையாளங்கள்.. சங்க காலம் தொட்டு, இன்று வரை!

புளிய மரம் மிக உறுதி! வெட்டுவதற்கு மிகவும் கடினம்! அதனால், பிற மரங்கள் போல் அல்லாது, ஏதோ கொஞ்சம் பிழைச்சிக் கிடக்கு!

ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக்

களரிப் புளியில் காய்பசி பெயர்ப்ப (- நற்றிணை)

3. இலுப்பை மரம்

இலுப்பை பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஆற்றங் கரைப் பகுதியில்!

4. மருத மரம்

மருதம் = தமிழின், தனிப் பெரும் திணைகளுள், நடுநாயகமான திணை!

முல்லை-குறிஞ்சி காட்டு வாழ்வை விடுத்து, மக்கள் வயல் வெளி நாகரிகம் கண்ட திணை! இன்றைய நகர வாழ்வுக்கு முன்னோடி!

மதுரை -> மருதை என்பதில் இருந்தே வந்தது! முன் பின்னாகத் தொக்க இலக்கணப் போலி! மருத மரங்கள் சூழ்ந்த வையை/வைகை ஆற்றின் நகரம்!

கழனிகளில், குளக் கரைகளில்.. நிழலுக்காகவே மிகப் போற்றப்படும் மருத மரம்!

*வெண்மருதம்

*கருமருதம்

*செம்மருதம்= மூனுமே உண்டு!

குளத்தங் கரைகளுக்கு.. மிகச் சிறந்த வேர்ப் பிடிப்பான்கள்!

மருது இமிழ்ந்து ஓங்கிய நளியிரும் பரப்பு ( – பதிற்றுப்பத்து)

இப்படி, இரும் பெரும் பரப்புக்கு.. மிக உகந்த, மண்ணை இறுக்கிப் பிடிக்கும் மருது!

திரு இடை மருதூர், பெரிய மருது/ சின்ன மருது.. இப்படி வரலாற்றிலும் திகழும் மருத மரம்!

நாகர்கள் வழிபாட்டில் இருந்த மருத மரம், பின்னாளில் சைவ சமய வழிபாட்டிலும், அர்ஜூன மரமாகிச் சேர்ந்தது!

ஆந்திர மண்ணில் உள்ள ஸ்ரீசைலம், மல்லிகார்ஜூனம்= மருத மரமே!

5. அரச மரம்

அரசன் – மரங்களுக்கு எல்லாம்!:)

எப்படி?

அளவில் பெரிதாக இருப்பதால் தான்! மிக விரிந்து வளரக் கூடியது!

குளக் கரையில் இல்லாத அரச மரமா? பிள்ளைப் பேற்றுக்கு, அதைச் சுற்றும் மூட நம்பிக்கைகளா?:)

ஆனால் இதே மூட நம்பிக்கை அரச மரம், ஞான மரமும் கூட!:)

இதன் கீழ் அமர்ந்த போது தான், ஞானம் பெற்று, சித்தார்த்தர் -> புத்தர் ஆனார்!

மரம்= ஞானம் தராது:) நிழல் தரும்!

அந் நிழலில், புத்தர் பெற்ற சிந்தனைத் தெளிவு, அவ்வளவே!

போதி மரம்-ன்னு வடமொழியில்! நம் தமிழில்= அரச மரம்!

அரச இலையே= பார்ப்பதற்கு, இதயம் போல் இருக்கும்!

அதன் இலை அழகால், குழந்தை இறைவனை, அரசஇலையில் வரைந்து விட்டனர், ஓவியர்கள்:) ஆனால் புராணம் சொல்வதோ “ஆல” இலை தான்:)

இப்படி, மூட நம்பிக்கைக் குழப்படிகள், அரச மரத்துக்கு நிறையவே உண்டு!

ஆனால், சங்கத் தமிழில், அரச மரம்/ அரசங் கிளை= மங்கலத்தின் அடையாளம்! திருமணங்களில், அரசாணிக்கால் உண்டு! (பந்தக்கால்)

அரசங் கிளை/ அரசம் பட்டை, புண் போக்கும் மருத்துவ குணமும் கொண்டது!

பறவைகளுக்கும் மிகப் பிடித்தமான மரம்.. அதன் பழங்களுக்காகவே!:)

6. ஆல மரம்

“ஆலும்” வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

என்பது தமிழ் வழக்கு!

ஞாயமாகப் பார்த்தால்.. இது தான் மரங்களின் அரசன் ஆகி இருக்க வேண்டும்! அதன் விழுதுகளும், தாங்கும் திறனும்!

ஆல் போல் தழைத்து… என்பது வாழ்த்தும் மொழி!

ஆலமா மரத்தின் இலை மேலொரு பாலகனாய்.. என்று சமயமும், குழந்தை இறைவனை, ஆல இலையில் தான் காட்டும்:) Sanskrit: வட+பத்ர+சாயீ:)

ஆனால் இதன் போகூழ் (துரதிருஷ்டம்), ஓவியர்கள்.. பிழையாக அரச இலையில் வரைந்து விட்டார்கள்:) அதுவே நின்றும் விட்டது!

ஆழமாக வேர் ஊன்ற வல்லவை!

விழுதுகளைப் பரப்ப வல்லவை!

மண் பிடிப்புக்கு, மிக மிக ஏற்றவை;

ஆனா ஏரியின் மடுவில் அவ்வளவு இடம் இல்லை என்பதால், குளத்து மரமாகி, வேர்ப் பிடிப்பான் ஆகின்றது!

ஆலம் பழம், குட்டிக் குட்டியாய்க் காணவே அழகு! இதை உண்ண, பறவைக்கும் – குரங்குக்கும் போட்டி நடப்பதைச் சங்கத் தமிழ் காட்டும்:) பழுமரம் எ. பேரும் உண்டு!

கல்லால மரம் என்பார்கள்; விழுது இன்னும் இறங்காத மரம்= கல்-ஆல மரம்!

கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து (- மலைபடுகடாம்)

மலைபடுகடாம் எ. சங்கத் தமிழ் நூல், நீர்நிலையோர வேர்ப் பிடிப்பான் மரங்களைக் காட்டும் விவரம்/ குறிப்புக்கள்!

இது ஆற்றுப்படை நூல் அல்லவா! பேசாம, “மரம் ஆற்றுப்படை”-ன்னே பேர் வைச்சீறலாம்!:) அத்துணைத் தகவல்கள்!

வறண்ட நிலங்கள்:

1. பனை மரம்

நாவல் பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஏரிக் கரைப் பகுதியில்!

2. சீதா மரம் (அன்னமின்னா)

சீதாப்பழம் என்ற பெயர் ஏன்?

அசோகவனத்தில், சீதை.. இந்தப் பழங்களையே உண்டு ஜீவித்து இருந்தாள் போன்ற கதைகள் இதுவரை யாரும் கிளப்பி விடலை:)

சீதளம்= குளிர்ச்சி! மிக்க குளிர்ச்சி குடுக்கும் பழம் ஆதலால் சீதளப் பழம் -> சீதாப் பழம்:)

இது சின்ன மரமே ஆயினும், இதன் வேர்கள் இழுத்துப் பிடிக்க வல்லவை!

அதான் வறண்ட நில ஊருணிகளின் ஓரம், இதை நட்டு வைப்பது வழக்கம்! அன்னமுன்னாப் பழம் என்பது ஈழத் தமிழ்!

இதன் வெண் பற்கள்= சுவை மட்டுமல்ல, சத்து மிக்கவையும் கூட!

சதுப்பு நிலம்:

1. பூவரச மரம்

அரச மரம் வேறு, பூவரச மரம் சற்றே வேறு!

இலைகள் பார்க்க, ஒன்றே போல் இருந்தாலும், அதன் பூக்கள் வேறு! தன்மைகள் வேறு!

மற்றபடி, இதுவும் நல்ல வேர்ப் பிடிப்பானே!

சற்றே ஈரம் மிக்க சதுப்பு நிலத்தில், இது பரவல்!

தமிழிசையில் கொட்டப்படுமே தவில்? அது இந்தப் பூவரச மரத்தின் கிளையிற் செய்வது தான்! இன்னும் பல இசைக்கருவிகளுக்கு உகந்த மரம்!

இதன் சங்கத் தமிழ்ப் பெயர்= “குடசம்”!

இதன் பூ, குடை போன்று இருப்பதால்!

வடவனம் வாகை, வான் பூங் குடசம் (-குறிஞ்சிப் பாட்டு)

பூவரசம் பூ பூத்தாச்சு, தமிழ்ச் சினிமாப் பாடலை அறியாதார் யார்?:) இதன் இலையில், “பீப்பீ” ஊதி மகிழும் சிறுவர்கள் இப்போதெல்லாம் இல்லை!

“இயற்கையோடு வாழும் வாழ்வு”.. இன்னும் அதி வேகமாய்த் தொலைந்து வருகிறது, நுகர்வு கலாச்சாரம் என்கிற Coporate லாபங்களின் பேரில்!

எங்களின் சுலபமான “நுகர்வு” மட்டும் போதும், அதைத் தரும் இயற்கை we don’t care! Why should we? Just live our selfish lives?:)

2. நாவல் மரம்

நாவல் பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஆற்றங் கரைப் பகுதியில்!

கரிசல் மண் நிலங்கள்:

1. வேப்ப மரம்

வேப்ப மரம் தமிழர் வாழ்வியலில் நெடுங்காலமாக பயின்று வருகிறது! பாண்டியனின் பூ= வேம்பு!

“வேம்பு ஆயிரம் மருந்து” என்பது தமிழ் மூதுரை!

மருத்துவத் தேவைக்காக மட்டுமன்றி உழவு/ பயிர்ப் பாதுகாப்பு/ வேப்பம் தழை/ வேப்பம்புண்ணாக்கு உரம் என்று பலவும் உதவிடும் வேம்பு!

வெறுமனே “வேப்ப மரம்” என்னாமல், பாண்டியன் நெடுஞ்செழியன் முதல் கவிஞர் இளங்கோவடிகள் வரை..

அனைவரும் அறிந்து வைத்துப் பாடிய வேம்பு.. என்று முன்னுரையில் பார்த்தோம் அல்லவா?

மூட நம்பிக்கைகள் பலவும் கடந்து நிற்கவல்ல வேப்பமரம்!

கரிசல் மண் கரைகளிலும், ஆழமாக வேர்ப்பிடித்து நிற்கும்!

எல்லாக் குளக்கரைகளிலும், வேப்ப மரம் கண்டு விட முடியாது! மண்ணுக்கேற்ற மரம்! கரிசல் மண்ணில் ஆழப் பாயும் வேம்பு!

அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்.. (- பொருநர் ஆற்றுப்படை)

கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த (- பெரும் பாண் ஆற்றுப்படை)

புறநானூற்றில், எங்கு பார்த்தாலும் வேப்ப மரம் தான்! ஊர் கூடும் மன்றங்கள் வரும் இடத்திலெல்லாம், வேம்பு வருணனை வந்து விடும்!

வேம்பாய்க் கசக்குதா? என்று கேட்பார்கள்!

ஆனா, வேப்பம் பூப் பச்சடி, உண்டு பாருங்கள், வெல்லம் இட்டு:) கசக்கும் வேம்பு மேல் காதலே வந்துவிடும்:)

2. இலுப்பை மரம்

இலுப்பை பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஆற்றங் கரைப் பகுதியில்!

3. புளிய மரம்

புளி பற்றி, முன்னரே பார்த்துட்டோம், குளக் கரைப் பகுதியில்!

4. இலந்தை மரம்

தள்ளு வண்டி இலந்தைப் பழத்தின் சுவை அறியாப் பள்ளிக் குழந்தைகள் உண்டா?

இலந்தைப் பழம் சினிமாப் பாடல் அறியாத இளைஞர்கள் உண்டா?:)

நாட்டு இலந்தை வேறு= சின்னது!

சீமை இலந்தை வேறு= சற்று பெரிது!

சீதாப் பழம் போலவே, இலந்தையும் சூடு தணிப்பான்! இலந்தை.. நல்ல வேர்ப் பிடிப்பான், கரிசல் மண் கரைகளுக்கு!

இலந்தையின், சங்கத் தமிழ்ப் பெயர்= இரத்தி!

கரிசல் மண் காடுகளில், பழமரம்! நீர்நிலைகள் எங்கும்..

உழையணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப்

புல்லரை “இரத்திப்” பொதிப்புறப் பசுங்காய்

கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம் (-நற்றிணை)

புளிப்பு/ காரம்/ இனிப்பு என முச் சுவையும் கலந்த இலந்தை!

இலந்தை வடை தின்னாத வாய் என்ன வாயே?:)

களிமண் நிலங்கள்:

1. மருத மரம்

மருதம் பற்றி, முன்னரே பார்த்துட்டோம், குளக் கரைப் பகுதியில்!

2. வேப்ப மரம்

வேம்பு பற்றி, முன்னரே பார்த்துட்டோம், கரிசல் பகுதியில்!

3. வாகை மரம்

வெற்றி வாகை- கேள்விப்பட்டிருப்பீங்க தானே?:)

அதிலுள்ள வாகை, இந்தப் பூவே!

தமிழின் புறத் திணைகளுள் ஒன்றான வாகை!

போரில் வெற்றி பெற்ற பின், அந்நாட்டின் வீரர்கள், வாகைப்பூவைச் சூடி உலாத்தல்!:)

இது, ஈழத் தமிழின், தேசிய மரமும் ஆகும்!

மிகப் பெரிய மரம்! பார்க்க தூங்குமூஞ்சி மரம் போல் இருப்பினும், அது அல்ல!

கொத்து கொத்து மகரந்தம் உடைய, அழகு மிக்க பூ! தட்டையான காய்!

வாகை மரம், மிக்க வலு உடையது! அதன் வேர்கள், களி மண் இறுக்கத்திலும் பரவிப் பிடித்து நிற்பவை!

எனவே தான், இவ் வகை மண்ணுள்ள நீர் நிலைகளில், வாகை மரம் வளர்த்தல் பற்றி, இலக்கியங்கள் பேசும்!

மாலமர் பெருஞ்சினை “வாகை” மன்றமும்

புள்ளிறை கூறும் வெள்ளின் மன்றமும் (- மணிமேகலை)

சரளை மண் நிலங்கள்:

1. ஆச்சா மரம்

சரளை மண்= Gravel போன்ற நிலங்களில் உள்ள நீர்நிலைகளைக் காக்க, சற்று மாறுபட்ட மரங்கள் வேண்டும்!

மண்ணே மிக்க Looseஆக இருக்கும்! அதிலும் அழுந்தப் பிடிக்கும் தன்மை உள்ளது, ஆச்சா மரம்! அடித் தண்டு வேர்கள்!

ஆச்சா மரத்தின் கட்டை= மிக உறுதி!

நாதசுரம் எனும் தென்னகத்துக்கே உரிய கம்பீர இசைக் கருவி! அதைச் செய்வதும், இம் மரத்தினால் தான்!

சால விருட்சம் (Saal) என்று வடமொழியில் சொல்வார்கள்! இலக்கியங்களில், வீரர்கள், அம்பால் துளைக்கும் மரமும் இதுவே, கம்பராமாயணம் உட்பட:)

2. கொன்றை மரம்

கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்!

இந்தப் பூவை விரும்பாதார் யார்?:)

கொன்றை மரமும், அதே சரளை மண்ணுக்கு (Gravel) மிக உகந்த அடித் தண்டு வேர்கள் கொண்டது!

மிகுந்த நிழலும் தர வல்லது! பழம் சற்று நச்சு எனினும், பூக்கள் மிகுந்த இன்பம் தரவல்லவை!

Golden Shower என்றே ஆங்கிலத்தில் சொல்வார்கள்!

சுடர்ப் பூங் கொன்றை தாஅய நீழல் (- மதுரைக் காஞ்சி)

கொன்றை மென் சினைப் பனி தவழ் (- பெரும் பாண் ஆற்றுப்படை)

“கொன்றை வேந்தன்” என்ற சிறுவர் பாட்டு, நமக்கெல்லாம் தெரியும் தானே?:)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று..

அதே!:) பின்னாள் ஒளவையார் எழுதிய பாடல் நூல்! 12th CE

“சரக் கொன்றை” என்று சொல்லும் அளவுக்கு, சரம் சரமாய் மஞ்சள் அழகு!

செம்மண் நிலங்கள்:

1. இலவம் மரம்

இலவு காத்த கிளி – என்ற பழமொழி நமக்கெல்லாம் தெரியும்:)

இலவம்= பூக்கும், காய்க்கும்.. ஆனா பழுக்காது!

வெடிச்சிப் பஞ்சு ஆயீரும்..

கிளி , பழத்துக்குக் காத்திருந்து ஏமாந்து போகும்!

கிளிக்கு நல்லது செய்யாவிடினும், மண்ணுக்கு நல்லது செய்யும் மரம்!

செம் மண் நிலத்தின், நீர் நிலைக் கரைகளுக்கு மிக உகந்தவை!

“உன்ன மரம்” என்று இதற்குப் பெயர், சங்கத் தமிழில்!

திருந்து சிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்

“உன்ன மரத்த” துன்னருங் கவலை (- புறநானூறு)

படத்தில், அதன் வேர்களின் திண்மையைப் பாருங்கள்!

ஆனா வேர்கள் மட்டுமே திண்மை! மரக் கிளைகள் எளிதில் முறிந்து விடும்!

இலவம் பஞ்சு, மெத்தைக்கு மட்டுமல்ல!

இலவம் விதைகளை, நன்கு வறுத்தும் திங்கலாம்:)

2. நெல்லி மரம்

அருநெல்லிக்காய் சாப்பிட்டு, தண்ணி குடிக்காத பசங்க உண்டா?:)

நெல்லி= கரு நெல்லி, அரு நெல்லி என வகைகள் கொண்டது!

விரிந்து பரந்த மரம்; சிறு சிறு இலைகள்!

தோப்பு நெல்லி/ காட்டு நெல்லி எனும் பெரிய நெல்லிக்காயும் உண்டு!

மலைகளில் தான் நெல்லி வளர்ச்சி அதிகம்!

எனினும், செம்மண் நிலங்களிலும் வளரும்! செம் மண்ணை இறுக்கிப் பிடிக்கும் வேர்கள்!

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு = முச்சுவை கொண்ட நெல்லிக்காய்! அதியமான், முதலாம் ஒளவைக்கு அளித்த கதை, நமக்கெல்லாம் தெரியும் தானே?:)

3. பூவரசு மரம்

பூவரசு பற்றி, முன்னரே பார்த்துட்டோம், சதுப்பு நிலப் பகுதியில்!

4. சந்தன மரம்

சந்தன மரம் பற்றிச் சொல்லவே வேணாம்! வீரப்பப் புகழ்:)

இதுவும் மலை மரம்/ செம்மண் மரம்!

இது தனித்து வளராது! அருகில் சில மரங்கள் தேவை:)

ஆமாம்! வேறு மரத்து வேர்களில் இருந்து, கொஞ்சம் சத்து தனக்கு உறிஞ்சிக் கொள்ளும் சந்தனம்!

வாசனை குடுக்கும் மரத்தின், திருட்டுத்தனத்தைப் பார்த்தீங்களா?:)

இருப்பினும், இந்த இயல்பே.. இதுக்கு மண்ணை இறுக்கும் ஆற்றலும் குடுக்கிறது! அருகில் போய் உறிஞ்சும் அளவுக்கு!

அதனால் தான் செம்மண்/ மலைகளில், மண் அரிப்பு இல்லாமல் காக்க உதவுபவை!

சுமாரான உயரம் வளரக் கூடியவை! வைரம் பாய்ந்த கட்டையில் எண்ணெயும் அதிகம்! மணமும் குளிர்ச்சியும் தரவல்ல சந்தனம்!

சந்தனப் பூக்களின் கருஞ் சிவப்பு, பார்க்கவே மிக்க அழகு!

5. தேக்கு மரம்

தேக்கு ஒரு வன்மரம்!

மலைவாழ்/ செம்மண்ணில் இறுக்கிப் பிடித்து வளரும் வேர்கள்!

தேக்கு என்பதே, ஆங்கிலத்தில் Teak ஆனது!

மர உறுதியால், சங்கத் தமிழ் வணிகத்தில்..

ரோமாபுரி வரை கூடச் சென்றது!

இதை வளர்க்க, ரொம்பவே பொறுமை வேணும்:) நன்கு பூக்கவே 15 ஆண்டு ஆகும்!

மிகவும் ஒளி விரும்பி மரம்! அதான் மலைப் பாங்கு வெளிகளுக்கு ஏற்றது!

தச்சர்களின் நண்பன்= தேக்கு:)

விலை அதிகம் என்றாலும், இதை வளர்த்து முடிப்பதற்குள் பொறுமை போய்விடும்:)

தேக்கின் உறுதி= கப்பல் கட்டவும், அந்நாளில் சேரர்களுக்கு உதவிற்று!

கடலோர மணல் நிலங்கள்:

1. பனை மரம்

பனை பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஏரிக் கரைப் பகுதியில்!

2. தூங்குமூஞ்சி மரம்

இலைகள் கூம்பி மூடிக் கொள்வதால், இப் பெயர்!:)

ஆனா, ரொம்ப நல்ல மரம்!

CO2 Sequestration எனப்படும் கரியமிலக் காற்றை அதிகமாய் உள்வாங்கி, Oxygen எனும் உயிர் வளிக் கொடை தரவல்லது!

மழை மரம் என்றும் இதைச் சொல்வார்கள்! கடலோர உப்புக் காற்றுக்கு ஈடுகொடுத்து, அதன் மண்ணை இறுக்கும் வேர்கள் உடையவை! கடலோரக் கேணிகளுக்கு மிக உகந்தவை!

3. பெருமூங்கில்

மூங்கில் பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஆற்றங் கரைப் பகுதியில்!

உவர் மண் நிலங்கள்:

1. புங்க மரம்

உப்புக் கரிக்கும் உவர் மண் கரைகளிலும்,

நல்ல நீர் நிலைகள் இருப்பின்..

அவற்றின் கரையைப் பலப்படுத்த வல்ல வேர்கள் உடைய புங்க மரம்!

வறள் அடும்பின் இவர் பகன்றைத்

தளிர்ப் புன்கின் தாழ் காவி

(-பொருநர் ஆற்றுப்படை)

புங்கை/ புன்கு எனச் சங்கத் தமிழ், இம் மரம் பற்றிப் பேசும்! தீப் புண்களுக்கு, மிக உதவும் மரம்!

அதிக சூடு உள்ள நோய்களை ஆற்ற, இதன் பட்டையும் வேரும் பயன்படும்!

வெப்பத்தை உறிஞ்சி, குளிர் தன்மையைத் தர வல்ல..

பச்சைப் பசுமை மிகுந்த புங்க மரத்தின் நிழல்! இது தென்னகத்தின் சொத்து!

2. வாகை மரம்

வாகை பற்றி, முன்னரே பார்த்துட்டோம், களிமண் பகுதியில்!

களர் மண் நிலங்கள்:

1. வேப்ப மரம்

வேம்பு பற்றி, முன்னரே பார்த்துட்டோம், கரிசல் பகுதியில்!

2. கருவேல மரம்

(சீமைக் கருவேலம் அல்ல, நாட்டுக் கருவேலம்)

வேலம் பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஏரிக் கரைப் பகுதியில்!

3. இலுப்பை மரம்

இலுப்பை பற்றி, முன்னரே பார்த்துட்டோம், ஆற்றங் கரைப் பகுதியில்!

4. தைல மரம் (நீலகிரி மரம்)

Eucalyptus என்றே இதனை நாம் அறிவோம்:)

இதன் சங்கத் தமிழ்ப் பெயர்= தைல மரம்!

ஏன் அந்தப் பெயர்?-ன்னு உங்களுக்கே தெரியும்!

நீலகிரி எனப்படும் ஒத்தைக்கல் மந்தை (Ootacamund)..

ஊட்டித் தைலம் என்றே பேர் வாங்கிவிட்டாலும், இது, தமிழகத்தின் பல உயரமான குளிர் மலைகளில் எல்லாம், வளரக் கூடியது!

மலை மேவும் நீர்நிலைகளின் கரையை, ஆழக் காக்க வல்லது!

குறிப்பாக, மலைகளில் தான் அதிகமான Erosion ஏற்படும், ஓடும் நீரால்!

அங்கு, ஆழ வேர்விட்டு, மண் அரிப்பு ஏற்படாமல், இறுக்கிக் காக்க வல்லது!

முடிப்புரை:

மேலே, இந்த ஆய்வுக் கட்டுரையில்..

நாம் குறித்த மரங்கள் எல்லாம் = நீர்நிலைக் “கரை காக்கும்” முதன்மை நோக்கத்துக்காகவே கொடுத்தவை!

ஆனால், இது மட்டுமே அல்லாமல், இந்த மரங்களின் பயன்கள், பல்வேறு!

சங்கத் தமிழில் “நீர் மேலாண்மை” = நமக்கெல்லாம் ஒரு பாடம்!

அறிவியல், மிகவும் வளர்ந்து விட்ட இக் காலம்!

ஆனால், அறிவியல் வளராத அன்றே..

இயற்கையோடு இணைந்த வாழ்வினால் கிடைத்த “பட்டறிவு”!

அதைக் கொண்டே,

இத்துணை நுட்பமாக, “கரை வளர்த்த” பண்பாட்டை, என் சொல்லிப் புகழ்வது?

ஆற்று நீரை…

1. வேளாண்மைக்கு= ஏரியில் ஓட்டி

2. உணவுக்கு= ஊருணியில் ஓட்டி

3. குளிக்க= குளத்தில் ஓட்டி

4. விலங்குக்கு= குட்டையில் ஓட்டும் Chain Network இது!

*கண்மாய்= இயற்கையாவே அமைந்தது!

*ஏரி= செயற்கையாய் வெட்டல் (சில மட்டும் இயற்கை)

அதே போல்..

*பொய்கை= இயற்கை

*குளம்= செயற்கை

தாங்கல்= பெரிய தேக்கம் | சென்னை, ஐயப்பன் தாங்கல்

ஏந்தல்= சிறிய தேக்கம் | தெக்கத்தி, கொம்புக்காரனேந்தல்

வாய்க்கால், கால்வாய்= இரண்டும் ஒன்றா?

அல்ல!:)

*ஆற்றில் இருந்து, பெரிதாக ஓட்டி வருவது= கால்வாய்!

*பின்பு, நம் நிலங்களில், அதைச் சிறிதாக ஓட்டிக் கொள்வது= வாய்க்கால்!

மேலே படத்தைப் பாருங்கள்!

ஒவ்வொரு நீர் நிலையும் = Inter Connected! இஃதொரு அற்புதமான Chain Network!

Chain எனும் சங்கிலியை..

நம் பேராசைக்கு உடைத்ததால் தான், வரமான நீரே= சாபமாயும் போனது!:(

சங்கத் தமிழ்= செயற்கைப் புராணங்கள் கலவாத “இயற்கைத் தமிழ்” என்று சொல்லுவார்களே?

தமிழ் மரபியல்: Soil Binders/ வேர்ப் பிடிப்பான் பற்றி நமக்குக் கற்றுக் கொடுத்த அற்புத மரபியல்!

வளரும் தலைமுறைக்கு ஏற்றாற் போல்.. இயற்கை மரபியல் பாடத்தை, சுவாரசியமாக மாற்றி எழுதுவோம்!

மீண்டும் தொலைந்து போகாமல், சுவையாக மாறிக் கொண்டே இருக்கும் பாடம், “அடிப்படை”யை மட்டும் இழக்கவே இழக்காது!

செயற்கையிலும்= இயற்கையே போற்றிய நம் மரபு!

இயற்கை என்பதை..

முதலில் “உணர்வோம்”; பின்பு “காப்போம்”!

அந்தக் காப்பு= இயற்கைக்காக அல்ல! நமக்கே!

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் – மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை!

நீர் இன்று அமையாது உலகு!

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

எங்களின் தோழா, நீரே= உனக்கு வணக்கம்

பதிவு: மாதவிப் பந்தல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.